உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மாவட்ட அளவிலான செஸ் போட்டி சாதித்த வீரர்கள் மாநில போட்டிக்கு தேர்வு

மாவட்ட அளவிலான செஸ் போட்டி சாதித்த வீரர்கள் மாநில போட்டிக்கு தேர்வு

ஊட்டி : ஊட்டியில், மாவட்ட அளவில் செஸ் போட்டி நடந்தது.நீலகிரி மாவட்ட செஸ் சங்கம் மற்றும் ஊட்டி கிரசன்ட் பள்ளி இணைந்து, 'மாவட்ட செஸ் சாம்பியன்ஷிப்-2025' செஸ் போட்டிகளை இரண்டு நாட்கள் நடத்தின. அதில், '30க்கும் மேற்பட்ட பள்ளிகள், செஸ் சங்கங்கள் மற்றும் ஆர்வலர்கள்,' என, 300க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். மாவட்ட செஸ் சங்க செயலாளர் விவேக், முதுநிலை தேசிய செஸ் நடுவர் ஜுனைஸ் ஆகியோர் முதன்மை 'ஆர்பிட்டராக' பணியாற்றினர். தொடர்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில், சார்பு நீதிபதி பாலமுருகன், ஆர்.டி.ஓ., சதீஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர் சஜீத் உட்பட பலருக்கு பரிசுகளை வழங்கினர். மேலும், பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கான, தேசிய செஸ் போட்டியில்சாதித்த அன்பரசிக்கு, கிரசன்ட் பள்ளி சார்பில் சிறப்பு கவுரவம் அளிக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது. இந்த போட்டியில் சிறந்த முறையில் செயல்பட்ட வீரர்கள், மாநில செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் உமர் பரூக், தலைமை ஆசிரியர் ஆல்ட்ரிட்ஜ் பார்னி, விளையாட்டு செயலாளர் பீனா, மாவட்ட செஸ் சங்க இணை செயலாளர் ராஜிவ் உட்பட பலர் செய்திருந்தனர்.

நிதி உதவி அளித்தால் சாதிக்கலாம்...

பந்தலுார் எருமாடு கிராம பகுதியை சேர்ந்தவர் அன்பரசி. இவர், பெங்களூருவில் நடந்த பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கான, தேசிய செஸ் போட்டியில் பங்கேற்றார். இதில், முதல், 10 பேர் தகுதி பெறும் நிலையில், ஒன்பதாம் இடம் பிடித்து தேசிய சாதனை படைத்தார். இவர் ஏற்கனவே, தேசிய அளவிலான, 13 போட்டிகளில் பங்கு பெற்று பதக்கம் வென்றுள்ளார். அன்பரசி கூறுகையில், ''என்னை போன்ற குக்கிராமங்களில் உள்ள நபர்களுக்கு, இதுபோன்ற கவுரவம் அளிப்பதன் மூலம், மாணவர்களுக்கு பயிற்சி அளித்து சாதிக்க வைக்கும் ஆர்வம் ஏற்படும். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க போதிய பயிற்சி மற்றும் அதற்கான நிதி உதவி அளிக்க, மாவட்ட நிர்வாகம் முன்வந்தால், நம் மாவட்டத்தில் பல சாதனையாளர்கள் உருவாக முடியும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !