| ADDED : நவ 27, 2025 04:43 AM
ஊட்டி: ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட தீட்டுக்கல் சாலை வழியாக ஏராளமான கிராமங்கள், தனியார் பள்ளிகள், மத்திய அரசு நிறுவனங்களுக்கு பலரும் அரசு பஸ்கள்; தனியார் வாகனங்களில் சென்று வருகின்றனர். சாலையில் ஆங்காங்கே காணப்படும் குண்டும், குழிகளால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு இடையே வாகனங்களை இயக்கி வருகின்றனர். பள்ளங்களில் தேங்கியுள்ள மழை நீரால் குறிப்பாக , இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சாலையை சீரமைக்க வலியுறுத்தி, நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் மனு அளித்துள்ளனர். நகராட்சி நிர்வாகம் இதுவரை எவ்வித ஆய்வு மேற்கொள்ளாததால் சாலையின் நிலை மோசம் அடைந்துள்ளது. பொதுமக்கள் கூறுகையில், ''தீட்டுக்கல் சாலை வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு, மழை நீர் தேங்கியுள்ளது. புகார் அளித்தும் சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன் வரவில்லை. விரைவில் பொதுமக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்,''என்றனர்.