மாநில அரசின் வளமிகு வட்டார வளர்ச்சி திட்டம்; கூடலுாரில் கலந்தாய்வு கூட்டம்
கூடலுார்: கூடலுார் வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் வளமிகு வட்டார வளர்ச்சி திட்டம் குறித்து, மாவட்ட கலெக்டர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.மாநிலத்தில் வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. திட்டத்தின் கீழ், கூடலுார் வட்டாரப்பகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.இதற்காக மூன்று ஆண்டுகளுக்கு, 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வட்டாரத்தில் பின்தங்கிய குறியீடுகள் உள்ள துறைகளை, 100 சதவீதம் முன்னேற்றமடைய செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.இத்திட்டப் பணிகள் தொடர்பாக, கூடலுார் நாடார் திருமண மண்டபத்தில் கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில், கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமை வகித்து பேசுகையில், ''வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்த முதல் கட்டமாக நடப்பாண்டு, 2 கோடி ரூபாய் அளவிலான கல்வி, சுகாதாரம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், தோட்டக்கலை துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் திட்டங்கள் செயல்படுத்த உள்ளது,'' என்றார். தொடர்ந்து திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் நடந்தது.கூட்டத்தில், கூடலுார் எம்.எல்.ஏ., பொன்ஜெயசீலன், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், நகராட்சி தலைவர்கள் பரிமளா (கூடலுார்), சிவகாமி (நெல்லியாளம்), கூடலுார் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா உட்பட பலர் பங்கேற்றனர்.