மூடப்பட்ட இடங்களில் மீண்டும் மதுக்கடை திறக்க வலுக்கிறது எதிர்ப்பு! தடுக்க கோரி கிராம நிர்வாகிகள் கலெக்டரிடம் மனு
ஊட்டி ; ஊட்டி அருகே பல்வேறு பகுதிகளிலும் மூடப்பட்ட இடத்தில் மீண்டும் டாஸ்மாக் மதுக்கடை திறக்கும் நடவடிக்கையை நிறுத்த கோரி, கிராம நிர்வாகிகள் கலெக்டரிடம் மனு அளித்து வருகின்றனர்.நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி, குன்னுார், குந்தா, கோத்தகிரி, கூடலுார், பந்தலுார் ஆகிய ஆறு தாலுக்கா பகுதிகளில் கடந்த, ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, 'பிரதான சாலை, மக்கள் அத்தியாவசிய தேவைக்கு வரும் இடங்கள்,' என, பார்க்கும் இடங்களில் எல்லாம், 150 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வந்தன.இதனால், மது பிரியர்கள், 25 வயது முதல், 35 வயதுள்ள இளைஞர்கள் மது பழக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டனர். இதனை அடுத்து, 'இடையூறு உள்ள இடங்களில் மதுக்கடைகளை மூட வேண்டும்,'என, பொதுநலம் மற்றும் பொதுமக்கள் சார்பில் மாநில முதல்வர், மாவட்ட கலெக்டருக்கு ஏராளமான புகார் மனுக்கள் அனுப்பப்பட்டது; போராட்டம் நடந்தது.இதன் எதிரொலியாக டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டது. தற்போது, மாவட்டம் முழுவதும், 77 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகிறது. தினசரி வருமானம், சராசரியாக, 1.80 கோடி ரூபாயாகும். விசேஷ நாட்களில், 2 கோடி ரூபாயை எட்டிவிடும். மீண்டும் திறக்க நடவடிக்கை
இந்நிலையில், ஒவ்வொரு டாஸ்மாக் மதுக்கடைகளின் வருமானத்தை அதிகாரிகள் கணக்கிட்டு பார்த்ததில், வருவாய் குறைவாக உள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால், 'வருமானத்தை அதிகரிக்க வேண்டும்,' என, டாஸ்மாக் நிர்வாகம் ஊழியர்களுக்கு 'டார்கெட்' நிர்ணயித்துள்ளது.இதற்கிடையே, ஊட்டி, குன்னுார், குந்தா, கோத்தகிரி, கூடலுார், பந்தலுார் ஆகிய தாலுகா பகுதிகளில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில், 20 கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடைக்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் ஊழியர்கள் இறங்கியுள்ளனர். இதன் எதிரொலியாக, நேற்று, தும்மனட்டி ஊராட்சிக்கு உட்பட்ட, 18 கிராம நிர்வாகிகள் ஒன்று திரண்டு வந்து, கலெக்டர் லட்சுமி பவ்யாவை சந்தித்து, 'கெந்தொரை, தும்மனட்டி பகுதியில் மூடப்பட்ட இடத்தில் டாஸ்மாக் கடை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருப்பது குறித்து தகவல் வந்தது. அதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்,' என, வலியுறுத்தி மனு கொடுத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக, கலெக்டர் உறுதி அளித்துள்ளார். ஏற்கனவே, மசினகுடி, ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் மதுக்கடை திறக்கும் பணிக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாநில முதல்வர்; கலெக்டருக்கு மனு அனுப்பி உள்ளனர். மேலும், பல கிராமங்களில் புதிய மதுக்கடைகளை திறக்க கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.