| ADDED : பிப் 15, 2024 12:21 AM
அன்னுார் : விழும் அபாய நிலையில் உள்ள துணை சுகாதார நிலைய கட்டடத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.கஞ்சப்பள்ளியில் துணை சுகாதார நிலையம் 25 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த கட்டடம் விரிசல் விட்டு செங்கற்கள் உதிர்ந்து மிக மோசமான நிலையில் உள்ளது.இதனால் சுகாதார செவிலியர் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள், வளர்இளம் பெண்கள் இந்த கட்டடத்திற்குள் சென்று மருத்துவம் பார்க்க அச்சமடைகின்றனர்.கட்டடத்திற்கு வெளியே திறந்த வெளியில் மருத்துவம் பார்க்க வேண்டிய நிலை உள்ளது. இந்த கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிய கட்டடம் கட்டும்படி ஐந்து ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை.இது குறித்து ஊராட்சி தலைவர் சித்ரா கூறுகையில், கஞ்சப்பள்ளி, நீலகண்டன் புதூர், ஊத்துப்பாளையம், தாசபாளையம் உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இந்த துணை சுகாதார நிலையத்தால் பயனடைகின்றனர்.இந்த கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த பொதுப்பணித்துறை அனுமதி அளித்துள்ளது. ஆனால் கட்டடத்தை இடித்து அகற்றாமலும் புதிய கட்டடத்தை கட்டாமலும் பொதுப்பணித்துறை இழுத்தடிக்கிறது. இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்திலும் பொதுப்பணித்துறை அலுவலகத்திலும் பலமுறை மனு அளித்துள்ளேன், என்றார்.பொதுப்பணி துறையின் மெத்தனத்தால் துணை சுகாதார நிலையத்துக்கு பெரும்பாலானவர்கள் வர தயங்குகின்றனர்.