உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கூடலுார் பாண்டியார்-புன்னம்புழாவில் பெருக்கெடுத்து வீணாகும் மழை நீர்! மாயாறு ஆற்றுடன் இணைத்தால் விவசாயத்துக்கு பயன்

கூடலுார் பாண்டியார்-புன்னம்புழாவில் பெருக்கெடுத்து வீணாகும் மழை நீர்! மாயாறு ஆற்றுடன் இணைத்தால் விவசாயத்துக்கு பயன்

கூடலுார்: கூடலுாரில் உற்பத்தியாகி, கேரளா சாலியார் ஆற்றில் கலந்து வீணாகும், பாண்டியார்-புன்னம்புழா ஆற்றை மாயாறு ஆற்றுடன் இணைத்தால், மழை நீரை சேமித்து, பவானி உட்பட சமவெளி பகுதிகளின் விவசாயத்துக்கு பயன்படுத்த முடியும்.நீலகிரி மாவட்டம், கூடலுாரில் உற்பத்தியாகும், பாண்டியார் -புன்னம்புழா ஆறு, கேரளா சாலியார் ஆற்றிலும்; மாயாறு ஆறு பவானி ஆற்றிலும், பொன்னானி ஆறு கர்னாடக மாநிலம் கபனி ஆற்றிலும் இணைகின்றன.அதில், பாண்டியார் - புன்னம்புழா ஆற்றை மையமாக வைத்து, நீர்மின் திட்டத்தை செயல்படுத்த, 1969ல் மாநில அரசு முடிவு செய்தது. இத்திட்டத்தால், '14 டி.எம்.சி., தண்ணீரை தமிழக -கேரளா மாநிலங்கள் சரிசமமாக பங்கிடுவது; இதனால், 260 மெகாவாட் மின் உற்பத்தியை மேற்கொள்ள முடியும் என்றும்,' கணிக்கப்பட்டது.இதனிடையே, 'சாலியார் ஆற்றுக்கு வரும் நீர்வரத்து நின்றுவிடும்; இதனால், இப்பகுதி மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகும்,' என, அச்சமடைந்த கேரளா அரசு, தமிழக திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது. மறுபுறம் இத்திட்டம் தொடர்பான ஆய்வில், மின் திட்டத்தை செயல்படுத்தினால், '5,000 ஏக்கர்நீரில் மூழ்கும்; அதில், 50 சதவீதம் வனப்பகுதியாக இருக்கும். இதனால், கூடலுார், முதுமலை பகுதிகளில், பழங்குடியினர்; வனவிலங்குகள் பாதிப்படைய வாய்ப்புள்ளது,' என, அப்போது அமைக்கப்பட்ட குழு தெரிவித்த நிலையில், திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

வீணாக கடலில் கலக்கும் மழைநீர்

அதன்பின், கூடலுாரில் உருவாகி கேரளா சாலியாறு வழியாக சென்று கடலில் கலந்து வீணாகும் மழை நீரை சேமிக்கும் வகையில், பாண்டியார்-புன்னம் புழா ஆற்றை, மாயாறு அற்றுடன் இணைக்க மீண்டும் விவசாய சங்கங்கள் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது. அதனை செயல்படுத்த மாநில அரசு இதுவரை திட்டம் வகுக்கவில்லை.இந்நிலையில், நடப்பாண்டு கூடலுார், பந்தலுார் பகுதியில் வழக்கத்தை விட முன்னதாகவே பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. வழக்கம்போல், பாண்டியார் -புன்னம்புழா மற்றும் அதன் கிளை ஆறுகளில் ஏற்பட்ட மழை வெள்ளம், பயனின்றி கேரளா சாலியாற்றில் கலந்து அரபிகடல் சென்று வீணாகிறது.வீணாகும் மழைநீரை சேமிக்க, பாண்டியார்- -புன்னம்புழா ஆற்றை பவானிகிளை நதியான முதுமலை மாயாற்றுடன் இணைக்க, தற்போதைய காலகட்டத்தில், கூடலுாரில் ஆய்வு செய்து, அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.கூடலுார் பகுதி விவசாயி சந்திரன் கூறுகையில், ''நடப்பு ஆண்டு முன்னதாக பருவமழை துவங்கி பெய்து வருகிறது. அதில், கூடலுார் சுற்றுப்புற பகுதிகளில் பெய்யும் மழைநீர், பாண்டியார்-புன்னம்புழா வழியாக கேரளாவுக்கு சென்று கடலில் கலப்பதால் பயன் ஏதும் இல்லை. இந்த நீரை தமிழகத்துக்கு திருப்பி விட்டு சேமித்து பயன்படுத்த முடியும். எனவே, மாநிலத்தின் ஆறுகளை இணைக்கும் திட்டத்தில், முதல் முயற்சியாக பாண்டியார் -புன்னம்புழா ஆற்றை மாயார் ஆற்றுடன் இணைக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை