வீணாகிய நெற்பயிருக்கு நிவாரணம்; சிறு விவசாயிகள் எதிர்பார்ப்பு
கூடலுார்; 'கூடலுார் பகுதியில் மழையால் வீணாகிய நெற்பயிர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்,' என, வலியுறுத்தியுள்ளனர்.கூடலுார் அள்ளூர்வயல், தொரப்பள்ளி, குணில், புத்துார்வயல், மண்வயல் கம்மாத்தி உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர். விரைவில் அறுவடை துவங்க உள்ளனர்.இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக பெய்த மழையில், பல பகுதிகளில் வயல்களில் மழை நீர் தேங்கி, நெற்கதிர்கள் சாய்ந்தும், நீரில் மூழ்கியும் வீணாகி உள்ளது. இதனால், ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.விவசாயிகள் கூறுகையில், 'கூடலுார் பகுதியில், பயிரிட்டுள்ள நெற்கதிர்களை ஏற்கனவே காட்டு யானைகள் சேதப்படுத்தி நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளன. மீதமுள்ள நெற்கதிர்களை அறுவடை செய்யும் பணி துவங்க உள்ள நிலையில், தற்போது பெய்த மழையில், வயல்களில் மழை நீர் தேங்கி வீணாகி உள்ளது. இதனால், ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்யும் வகையில், சமவெளி பகுதிகளில் வழங்குவது போன்று இப்பகுதியில், மழை நீரில் மூழ்கி வீணான நெற்பயிர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்,' என்றனர்.