உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சேதமடைந்த தடுப்பணைகளை சீரமைத்தால்...  கோடையில் பயன்! வனவிலங்குகள் குடிநீர் தேவை பூர்த்தியாகும்

சேதமடைந்த தடுப்பணைகளை சீரமைத்தால்...  கோடையில் பயன்! வனவிலங்குகள் குடிநீர் தேவை பூர்த்தியாகும்

கூடலுார்: முதுமலை, கூடலுார் சேதமடைந்துள்ள தடுப்பணைகளை, முன்னெச்சரிக்கையாக வனத்துறை சீரமைத்தால், கோடையில் வனவிலங்குகள் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். முதுமலை புலிகள் காப்பகம், கூடலுார் மற்றும் மசினகுடி வனக்கோட்டம் ஆகியவை வனவிலங்குகளின் முக்கிய வாழ்விடமாகும். கோடையில் வனவிலங்குகளின் குடிநீர் தேவை பூர்த்தி செய்ய, நீர் நிலைகளில் தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளது. முதுமலை, மசினகுடி பகுதியில், கோடை வறட்சியின் போது, நீர் ஆதாரங்கள் இல்லாத பகுதிகளில், வனத்துறையினர் சிமென்ட் தொட்டிகள் அமைத்து, வாகனங்களில் தண்ணீர் எடுத்து சென்று, அதில் ஊற்றி வனவிலங்குகளில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். ஆனால், கூடலுார் பகுதியில் கோடை வறட்சியின் போது வன விலங்குகள் ஆறுகள், நீரோடைகள் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகள் மட்டுமே நம்பியுள்ளன. வறட்சி காலத்தில் சிக்கல் இந்நிலையில், வறட்சி காலத்தில், தடுப்பணைகளில் தண்ணீர் இல்லாத போது, யானைகள் குடிநீர், உணவு தேடி குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி, மக்களையும் அச்சுறுத்தி வருகின்றன. கூடலுார் வனவிலங்குகள் குடிநீர் தேவை பூர்த்தி செய்ய அமைக்கப்பட்டுள்ள பல தடுப்பணைகள் சேதமடைந்து சீரமைக்கப்படாமல் உள்ளதால் பல்வேறு பிரச்னைகள் ஆண்டுதோறும் நடக்கின்றன. சேதமடைந்த தடுப்பணைகளில், குடிநீர் கிடைக்காத சூழலில், பல்வேறு வனவிலங்குகள் கிராமங்களில் நுழையும் ஆபத்து உள்ளது. இதனை தடுக்க, வனத்துறையினர் சேதமடைந்த தடுப்பணைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். இல்லையெனில், மனித- விலங்கு மோதல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தடுப்பணை சீரமைப்பு அவசியம் வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில், 'கூடலுாரில் கோடைகாலத்தில் வறட்சியின் தாக்கம் அதிகரித்து, வனவிலங்குகளுக்குஉணவு, குடிநீர் தட்டுப்பாடு அதிகரிக்கும் சூழ்நிலை உள்ளது. இதனால், வனவிலங்குகள் குடிநீர், உணவு தேடி குடியிருப்பு நோக்கி அதிக அளவில் வர வாய்ப்புள்ளது. இதனை தடுக்க, சேதமடைந்த தடுப்பணைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். மேலும், கூடுதல் தடுப்பணைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நீர் ஆதாரங்கள் இல்லாத வனப் பகுதிகளில், சிமெண்ட் தொட்டிகள் அமைத்து, வாகனங்கள் மூலம் தண்ணீர் எடுத்து சென்று, அதில் நிரப்பி, வனவிலங்குகளின் குடிநீர் தேவையை வனப்பகுதியில் பூர்த்தி செய்தால், மனித - விலங்கு மோதல் இருக்காது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ