உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தடுப்பு சுவரால் கழிவுநீர் தேக்கம்; தாசில்தார் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

தடுப்பு சுவரால் கழிவுநீர் தேக்கம்; தாசில்தார் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

பந்தலுார் : பந்தலுார் எம்.ஜி.ஆர்., நகரில் கழிவுநீர் செல்லும் கால்வாயில் கட்டப்பட்ட தடுப்பு சுவரை அகற்ற வலியுறுத்தி, மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பந்தலுார் எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில் நுாற்றுக்கணக்கான குடியிருப்புகள் அமைந்துள்ளன. இங்கு குடியிருப்புக்கு மத்தியில் செல்லும் நடைபாதை வழியாக, வழிந்து ஓடும் கழிவுநீர், ஆலிகுட்டி என்பவரின் வீட்டு வழியாக சென்றுள்ளது. இதனால், கழிவுநீர் செல்லும் பாதையில் இவர் தடுப்பு சுவர் அமைத்தார்.கழிவுநீர் செல்ல வழி இல்லாமல், நடைபாதையில் தேங்கி, மக்கள் நடந்து செல்ல முடியாமலும், சுற்றுச்சூழல் பாதிப்பையும் ஏற்படுத்தியது. இதனால் தடுப்பை அகற்ற வலியுறுத்தி, இப்பகுதி மக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். தீர்வு கிடைக்காத நிலையில் நேற்று கிராம மக்கள் இணைந்து, தாசில்தார் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாசில்தார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில், கால்வாயில் உள்ள தடுப்பை அகற்ற விட்டால் தர்ணா போராட்டம் நடத்த போவதாக எச்சரித்தனர். தொடர்ந்து வருவாய் துறையினர், நெல்லியாளம் நகராட்சி நிர்வாகத்தினர், போலீசார் இணைந்து கால்வாயில் கட்டி இருந்த தடுப்பு சுவரை அகற்றினர். நிலத்தின் உரிமையாளர் ஆலிகுட்டி கூறுகையில்,''தடுப்பு சுவரை இடிக்காமல் நிலத்திற்கு அடியில், கால்வாய் அமைக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனை கண்டு கொள்ளாமல் அதிகாரிகள் முன்னறிவிப்பு ஏதும் இன்றி, தடுப்பு சுவரை இடித்ததால், எங்கள் வீட்டு குடிநீர் கிணறு பாதிக்கப்பட்டு, வீட்டு வாசலில் கழிவுநீர் செல்கிறது. எனவே, நீதிமன்ற உத்தரவை அலட்சியப்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மீண்டும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை