பாரதி நகர் பகுதிக்கு சாலை வசதி அவசியம்
ஊட்டி: ஊட்டி பாரதி நகர் மற்றும் மேட்டுச்சேரி பகுதியில், சாலை வசதி ஏற்படுத்த அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். ஊட்டி நகர் மன்ற உறுப்பினர் குமார் தலைமையில், பகுதி மக்கள் கலெக்டரிடம் அளித்த மனு: ஊட்டி நகராட்சி, 8வது வார்டுக்கு உட்பட்ட, பாரதிநகர் மற்றும் மேட்டுச்சேரி பகுதியில், 350 குடும்பங்கள், 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இப்பகுதி சாலை, 90 மீட்டர் நீளம் வனத் துறைக்கு சொந்தமானதாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டது.'வனத்துறை உயர் அதிகாரிகளால் கள ஆய்வு செய்யப்பட்டதுடன், சாலை அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,' என, பொதுமக்கள் முன்னிலையில் உறுதி அளிக்கப்பட்டது. மோசம் அடைந்த சாலையில், பள்ளி குழந்தைகள் மற்றும் மக்கள் சென்று வருவதில் சிரமம் அதிகரித்துள்ளது. மேலும், 108 ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் உறுதி வர முடியாத நிலை உள்ளது. எனவே, பகுதி மக்கள் நலன் கருதி, மாவட்ட நிர்வாகம், கான்கிரீட் அல்லது தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.