உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ரூ. 35 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்; கொட்டும் மழையில் அமர்க்களப்படுத்திய கலை நிகழ்ச்சிகள்

ரூ. 35 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்; கொட்டும் மழையில் அமர்க்களப்படுத்திய கலை நிகழ்ச்சிகள்

ஊட்டி; ஊட்டியில் நடந்த சுதந்திர தின விழாவில், 35.16 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஊட்டி அரசு கலைக் கல்லுாரி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில், 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. காலை, 10:00 மணிக்கு, மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா, தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, போலீசார் மற்றும் ஊர்க்காவல் படை வீரர்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். அதன்பின், காவல்துறை, வருவாய் துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் எஸ்.ஏ. டி.பி., உட்பட, பல்வேறு அரசு துறையில், சிறப்பாக பணியாற்றிய, 173 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து,'கூடலுார் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் செம்மொழியான தமிழ் மொழியாள் பாடல் நடனம்; ஓடைக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களின் வந்தே மாதரம் பாடல் நடனம்; ஊட்டி உட்சைடு பள்ளியில் 'வானம் ஒன்றே வையம் ஒன்றே' பாடல் நடனம்; பிரீக்ஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நாட்டுப்புற இசை பாடல் நடனம் நடந்தது. மேலும், குன்னுார் புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியரின் 'வாழ்க பாரதம்' பாடல் நடனம், தோடர் மற்றும் கோத்தர் மக்களின் பாரம்பரிய நடனம்; குன்னுார் பிராவிடன்ஸ் மகளிர் கல்லுாரி மாணவியரின் படுக இசை நடனம்,'ஆகியவை, பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. தொடர்ந்து, மோப்பநாயின் சாகச நிகழ்ச்சிகள் நடந்தது. பல்வேறு துறைகளின் கீழ், 19 பயனாளிகளுக்கு, 35 லட்சத்து, 16 ஆயிரத்து, 451ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. வருவாய் அலுவலர் நாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

மலையில் மகளிர் ஆட்சி...

ஊட்டியில் நேற்று நடந்த சுதந்திர தின விழாவில், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அதற்கு பெண் அதிகாரிகள் பலர் முன்னிலை வகித்தனர். அதில், கலெக்டர் லட்சுமி பவ்யா; எஸ்.பி., நிஷா; கூடுதல் கலெக்டர் அபிலாஷாகவுர் மற்றும் குன்னுார் சப்-கலெக்டர் சங்கீதா ஆகி யோர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !