உலக விண்வெளி வாரத்தை ஒட்டி அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஊட்டி;ஊட்டி ஜே.எஸ்.எஸ்., பப்ளிக் பள்ளியில் உலக விண்வெளி வாரத்தை ஒட்டி அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ஆண்டு தோறும் உலக விண்வெளி வாரம் அக்., 4ம் முதல் 10ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஊட்டி ஜே.எஸ்.எஸ்., பப்ளிக் பள்ளி, சாம்ராஜ்நகர், கிராவிட்டி சயின்ஸ் பவுண்டேஷன் அமைப்புடன் இணைந்து அறிவியல் சிறப்பு நிகழ்ச்சியை நடத்தியது. அதில், 'உலக விண்வெளி வாரம் என்பது, மனிதனால் உருவாக்கப்பட்ட முதன் செயற்கை கோளான 'ஸ்புட்னிக் -1' ஏவப்பட்டதை. நினைவுப்படுத்தும் சர்வதேச நிகழ்வாகும். நடப்பாண்டு கொண்டாட்டத்தின் கருப்பொருள், 'விண்வெளியில் வாழ்வது' என்பதை வலியுறுத்தும் விதமாக, நாடு முழுவதும் மாணவர்கள் இடையே விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கில், பல கல்வி நிறுவனங்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ஊட்டியில் நடந்த நிகழ்ச்சியில், சில இஸ்ரோ விஞ்ஞானிகள் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தனர். மேலும், 'செயற்கைக்கோள் தொழில்நுட்பம், விண்வெளி ஆராய்ச்சி மற்றும் இந்தியாவின் விண்வெளி சாதனைகள்,' குறித்து விளக்கம் அளித்தனர். மேலும், கண்காட்சி வாகனத்தின் வாயிலாக விண்வெளி தொடர்பான மாதிரிகள், புகைப்படங்கள் மற்றும் விஞ்ஞான விளக்கங்கள் காண்பிக்கப்பட்டன.