அரசு பள்ளியில் அறிவியல் கருத்தரங்கு; பிளாஸ்டிக் தவிர்க்க அறிவுரை
கோத்தகிரி; கோத்தகிரி பெட்டட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் அறிவியல் கருத்தரங்கு நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் ராதா தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜூ, சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:'ஜூலை மாதத்தை பிளாஸ்டிக் இல்லாத மாதமாக அனுசரிக்க வேண்டும்,' என, ஐ.நா.சபை., அறிவுறுத்தியுள்ளது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கில், 80 சதவீதம் ஒருமுறை மட்டுமே பயன்பட கூடியவை. நாம் துாக்கி எறியும் ஒவ்வொரு பிளாஸ்டிக்கும் இறுதியில் கடலில் போய் சேருகிறது. இது ஒரு நிமிடத்தில், ஒரு டிப்பர் லாரி நிறைய பிளாஸ்டிக் குப்பை கடலில் கொட்டப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த நிலை நீடித்தால், 2050ல் கடலில் மீன்களை விட, அதிக எண்ணிக்கையில் பிளாஸ்டிக் குப்பை தான் காணப்படும். சமீபத்தில், 90 நாட்களில் மட்கிப்போகும் 'பயோ பிளாஸ்டிக்' கண்டறியப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது.காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசலுக்கு பதிலாக ஹைட்ரஜன் வாயுவை பயன்படுத்தும் தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட உள்ளது. மக்கள் கூடுமானவரை பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது அவசியம். இவ்வாறு, அவர் பேசினார்.நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக பங்கேற்றனர்.