நடுஹட்டி ஊராட்சி மன்றத்தில் கனவு இல்ல திட்ட பயனாளிகள் தேர்வு
கோத்தகிரி : கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், நடுஹட்டி ஊராட்சி மன்றம் சார்பில், வெஸ்ட் புரூக் பகுதியில், கிராமசபை கூட்டம் நடந்தது.வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயா தலைமை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவன் முன்னிலை வகித்தார். நடுஹட்டி ஊராட்சிக்கு உட்பட்ட, பல்வேறு குக்கிரமங்களில் இருந்து, 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில், கலைஞர் கனவு இல்ல திட்டத்தில், வீடுகள் கட்டுவதற்கு, பயனளிகள் தேர்வு செய்யப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டது. ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து குக்கிராமங்களிலும், தனிநபர் கழிப்பிடம் அமைக்க பயனாளிகள் தேர்வு செய்வதுடன், அரசால் கட்டப்பட்ட வீடுகளை பழுது பார்க்க நடவடிக்கை எடுக்க உறுதி அளிக்கப்பட்டது. 'அனைத்து குக்கிராமங்களுக்கும், சுகாதாரமான தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பது,' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 15 மனுக்கள் பெறப்பட்டு, மேல் நடவடிக்கைக்காக, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதில், அனைத்து துறை அலுவலர்கள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர். ஊராட்சி செயலர் பிரியா நன்றி கூறினார்.