பூங்கா சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
ஊட்டி; ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் அடிக்கடி வழிந்தோடும் கழிவுநீரால் நோய்பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு, சீசன், வார இறுதி நாட்களில் அதிகளவில் சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். இப்பகுதியில், சேரிங்கிராசிலிருந்து பொதுமக்கள், சுற்றுலாபயணியர் பூங்கா வரை நடந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், பூங்கா சாலையில் பிரதான நடைப்பாதை ஓரத்தில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, அடிக்கடி பூங்கா சாலையில் கழிவு நீர் வழிந்தோடு கிறது. நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், சுற்றுலா பயணியர் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. துர்நாற்றம் வீசி, சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, நகராட்சி நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு அப்பகுதியில் கழிவு நீர் ஓடாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.