உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சில்ஹல்லா மின் திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தல்; திட்டத்தை ரத்து செய்ய கோரி கலெக்டரிடம் மனு

சில்ஹல்லா மின் திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தல்; திட்டத்தை ரத்து செய்ய கோரி கலெக்டரிடம் மனு

ஊட்டி; மஞ்சூரில் சில்ஹல்லா மின் திட்டம் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெம்பட்டி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். மஞ்சூர் அருகே சில்ஹல்லா ஆற்றின் குறுக்கே, 75 மீட்டர் உயரத்தில் ஒரு அணை மற்றும் குந்தா ஆற்றின் குறுக்கே, 108 மீட்டர் உயரத்தில் ஒரு அணை எழுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றை முறையே மேலணை மற்றும் கீழ் அணையாக கொண்டு, 2.8 கி.மீ., துாரத்திற்கு குகை வழி நீர் குழாய்கள் அமைத்து இந்த நீரேற்று புனல் மின் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது நீர் மின் நிலையமாக மட்டுமின்றி, நீரேற்று குகை மின் நிலையமாக அமைக்கப்பட உள்ளது. 543 கோடி ரூபாய் மதிப்பீடு திட்டமிடப்பட்டுள்ள இந்த திட்டத்திற்காக மொத்தம் , 980 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. 'இந்த திட்டத்தால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும், மேய்ச்சல் மற்றும் விவசாய நிலங்களை விவசாயிகள் இழக்க வேண்டி வரும்,' என கூறி, 30க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் மற்றும் உள்ளூர் மக்கள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே , இத்தலார் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்திலும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று பெம்பட்டி ஊர் தலைவர் கோபாலன், சில்ஹல்லா நீர் பிடிப்பு பகுதி பாதுகாப்பு குழு தலைவர் சிவலிங்கம் தலைமையில், மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யாவை சந்தித்து, திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை