பந்தலுார்: வாக்காளர் பட்டியலை முழுமையாக திருத்தம் செய்யும் வகையில், தீவிர சிறப்பு திருத்த பட்டியல் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக, எஸ்.ஐ.ஆர்., விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, விவரங்கள் பதிவு செய்தல் மற்றும் விண்ணப்பங்களை பெற்று அவற்றை வாக்காளர் பட்டியலில் பதிவேற்றம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து, பந்தலுார் அருகே சேரம்பாடி சுற்றுவட்டார, தேயிலை தோட்டங்களில் வருவாய் ஆய்வாளர் சிவக்குமார், உதவியாளர் ராமராஜ் ஆகியோர், நேரடியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். தோட்ட தொழிலாளர்கள் இலை பறிக்கும் இடங்களுக்கு சென்று, எஸ்.ஐ.ஆர்., விண்ணப்பங்களின் முக்கியத்துவம் மற்றும் அதனை பதிவு செய்யும் வழிமுறைகள், விபரங்கள் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை வழங்குவது குறித்து, விளக்கம் அளித்தனர். அப்போது, 'எதிர்காலத்தில் ஆதார் அட்டை போன்று, திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும். எனவே, தொழிலாளர்கள் விண்ணப்பங்களை, அந்தந்த பகுதி தேர்தல் அலுவலர்கள் மற்றும் வருவாய் துறையினர், ரேஷன் கடை பணியாளர்கள் உள்ளிட்ட அரசு பணியாளர்களிடம் வழங்கி, தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இடம்பெற செய்ய தொழிலாளர்கள் முன் வர வேண்டும்,' என தெரித்தனர். தொடர்ந்து, 'வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை இடம்பெற செய்ய, அனைவரும் ஒத்துழைப்போம்,' என, தொழிலாளர்கள் உறுதி அளித்தனர். நிகழ்ச்சியில், தோட்ட தொழிலாளர்கள், தோட்ட அலுவலர்கள் பங் கேற்றனர்.