உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  மாயமாகும் சிறு குடிநீர் தொட்டிகள்; ஊராட்சிகள் அலட்சியம்

 மாயமாகும் சிறு குடிநீர் தொட்டிகள்; ஊராட்சிகள் அலட்சியம்

உடுமலை: கிராமங்களில் சிறு குடிநீர் திட்டங்கள் பயன்பாடின்றி உள்ளதால், மக்கள் பாதிப்பதுடன், அரசு நிதியும் வீணடிக்கப்பட்டுள்ளது குறித்து, உடுமலை ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களுக்கு, திருமூர்த்தி அணையை ஆதாரமாக கொண்ட கூட்டுக்குடிநீர் திட்டங்கள் வாயிலாக, குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதில், பற்றாக்குறை ஏற்படும் போது, குடிநீர் தட்டுப்பாட்டை தடுக்க, பல்வேறு திட்டங்களின் கீழ், சிறு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. போர்வெல் அமைத்து அதிலிருந்து பெறப்படும் தண்ணீரை, சிறிய தொட்டிகளில் சேகரித்து வைப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இதற்காக பல்வேறு நிதி திட்டங்களில், போர்வெல் அமைத்து, மின் இணைப்பு பெற்று, குழாய்களும் அமைக்கப்பட்டன. கிராமங்களில் இருந்து தள்ளி அமைந்துள்ள குடியிருப்புகளுக்கு, இந்த குடிநீர் திட்டங்கள் பயனுள்ளதாக இருந்தது. ஆனால், ஊராட்சி நிர்வாகத்தினர் தொடர் பராமரிப்பு செய்யாததால், பல இடங்களில், இத்திட்டத்தில் அமைக்கப்பட்ட, குடிநீர் தொட்டிகள் மாயமாகியுள்ளது; குழாய்கள் சேதமடைந்து, பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியுள்ளது. இவ்வாறு, அனைத்து கிராமங்களிலும், பல லட்சம் ரூபாய் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, உடுமலை ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை. அனைத்து கிராமங்களிலும் ஆய்வு நடத்தி, சிறு குடிநீர் திட்டங்களின் நிலை குறித்து அறிக்கை தயார் செய்து, தமிழக முதல்வருக்கு புகார் மனு அனுப்ப, தன்னார்வலர்கள் தயாராகி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி