உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தேயிலை ஏற்றுமதியில் தென் மாநிலங்கள் பங்கு 62 சதவீதம்; உபாசி மாநாட்டில் பெருமிதம்

தேயிலை ஏற்றுமதியில் தென் மாநிலங்கள் பங்கு 62 சதவீதம்; உபாசி மாநாட்டில் பெருமிதம்

குன்னுார் : 'தேயிலை ஏற்றுமதியில், 62 சதவீதம் தென்மாநிலங்களில் இருந்து வந்தது என்பது மிகவும் ஊக்கமளிக்கிறது,' என, உபாசி தெரிவித்துள்ளது.குன்னுாரில் நடந்த தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்க, 131 வது மாநாட்டில், உபாசி முன்னாள் தலைவர் ஸ்ரீதரன் பேசியதாவது:முதலீட்டு தேவைகளை கொண்ட நீண்ட கால வணிக செயல்பாடுகளுடன், ஒழுங்கமைக்கப்பட்ட விவசாய நடவடிக்கையாக, பெருந்தோட்டம் துறையின் தனித்துவம் தனித்து நிற்கிறது. ஏலக்காய், மிளகு மற்றும் தேயிலைக்கு, 2 முதல் 4 ஆண்டுகள் வரையிலும், காபி மற்றும் ரப்பருக்கு, 5 முதல் 7 ஆண்டுகள் வரையிலும் உற்பத்தி காலம் மாறுபடும்.பொருளாதார வருமானம் குறைவாக இருந்தாலும், நீண்ட காலத்திற்கு ஒரே பயிரை தொடர்ந்து பயிரிட வேண்டிய கட்டாயம் உள்ளது.குறுகிய கால விவசாய பயிர்களை போலன்றி, சந்தை போக்குக்கு ஏற்ப விவசாயிகள் அவ்வப்போது மாற்றுப் பயிர்களுக்கு மாறலாம். தோட்ட துறையில் நிர்வகிக்கும் நில சட்டங்கள் நெகிழ்வு தன்மையை அனுமதிக்காததால், சவாலாக உள்ளது.உள்நாட்டு சூழலில், தனிநபர் வருமானம் வட மாநிலங்களை விட தென் மாநிலங்களில் மிக அதிகம். தற்போது, 40 சதவீதத்திற்கும் அதிகமான புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் தென் மாநில தோட்டங்கள் இயங்குகின்றன. வரும் நாட்களில் இதன் சதவீதம் அதிகரிக்கும். தேவை இல்லாத குழந்தை காப்பகங்களை மூட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளான நிர்வாகங்கள், தற்போது குழந்தை காப்பக வசதிகளை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.பெருந்தோட்ட துறையை அந்நிய செலாவணி ஈட்டி தரும் பொருளாக மட்டுமின்றி, 23.88 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக உள்ளது.தென் மாநிலங்களில், 63 சதவீத விவசாயிகள் மற்றும் 47 சதவீத தொழிலாளர்கள் உள்ளனர். விலையில் நீண்ட கால சரிவு, ​அதிக உற்பத்தி செலவு அடிப்படை சவாலாக உள்ளது. சந்தைப்படுத்தல் மற்றும் வர்த்தக துறைகளில் பாதிப்பு அதிகரித்துள்ளது.உலகளவில், சீனாவில் கிரீன் டீ, கென்யா மற்றும் வட மாநிலங்களில் 'டஸ்ட்' ரக தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் கென்யாவில், உற்பத்தி, 4 சதவீதம், வட மாநிலங்களில், 2.5 சதவீதம் வளர்ச்சியை சந்தித்துள்ளது. ஆனால் தென் மாநிலங்களில், 0.02 சதவீதம் உற்பத்தி குறைந்துள்ளது.அதே நேரத்தில் தேயிலையின் தனிநபர் உள்நாட்டு நுகர்வு, 2017ம் ஆண்டில் 786 கிராமில் இருந்து, 2023ல் 840 கிராம் வரை ஆண்டுக்கு, 0.9 சதவீதம் அதிகரித்தது.நம் நாட்டின் நடப்பாண்டு முதல் பாதியில் ஏற்றுமதி, 22.61 மில்லியன் கிலோ என அதிகமாக உள்ளது. தேயிலை ஏற்றுமதியில், 62 சதவீதம் தென்மாநிலங்களில் இருந்து வந்தது என்பது மிகவும் ஊக்கமளிக்கிறது. தென் மாநில தேயிலைக்கு மவுசு இருப்பதால் ஏற்றுமதி தொடரும். இவ்வறு ஸ்ரீதரன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை