உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மழை நீர் குழாயை பாதாள சாக்கடை இணைப்பில் விடுவதை...கண்காணிக்க சிறப்பு குழு!அத்துமீறினால் அபராதம்; சாக்கடை இணைப்பு துண்டிக்கப்படும்

மழை நீர் குழாயை பாதாள சாக்கடை இணைப்பில் விடுவதை...கண்காணிக்க சிறப்பு குழு!அத்துமீறினால் அபராதம்; சாக்கடை இணைப்பு துண்டிக்கப்படும்

ஊட்டி:'ஊட்டியில், பாதாள சாக்கடை இணைப்புக்குள் மழை நீர் செல்லும் வகையில் குழாய் பொருத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், பொது சுகாதார சட்டப்படி அபராதம் விதிப்பதுடன், கட்டடத்தின் பாதாள சாக்கடை இணைப்புகள் துண்டிக்கப்படும்,' என, நகராட்சி எச்சரித்துள்ளது.ஊட்டி நகராட்சியில், 36 வார்டுகள் உள்ளன. குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், காட்டேஜ், லாட்ஜ், தங்கும் விடுதிகள் அதிகளவில் உள்ளன. இங்கு, 30 வார்டுகளுக்கு பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. வெளியேறும் கழிவு நீர் பாதாள சாக்கடை திட்டத்திற்காக அமைக்கப்பட்ட தொட்டி வழியாக கோடப்பமந்து கால்வாய்க்கு செல்கிறது.நகரில் பாதாள சாக்கடை குழாய்கள் ஆங்காங்கே உடைந்த நிலையில் உள்ளது. நகரில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தாமல் அப்படியே இருப்பதால் பாதாள சாக்கடை திட்டத்தால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதனை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது.

நகரில் அத்துமீறல்

இந்நிலையில், நகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், நகரில் உள்ள குடியிருப்புகள், வணிகநிறுவனம், ஓட்டல், காட்டேஜ் வைத்துள்ளவர்கள் கட்டடத்தின் மொட்டை மாடி மற்றும் வளாகத்திலிருந்து வருகின்ற மழை நீரை, பாதாள சாக்கடை இணைப்புகளுக்குள் செல்லும் வகையில் குழாய்களை பொருத்தி இருப்பது தெரியவந்தது.இது போன்ற அத்துமீறலால் மழை காலங்களில் நகரில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீருடன் கழிவுகள் சேர்வதால் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்படுகிறது. மழை நீருடன் கழிவுநீர் கலந்து நகரில் ஆங்காங்கே சூழ்ந்து விடுகிறது. குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து குடியிருப்பு வாசிகளை பாடாய் படுத்துகிறது.

தொட்டி அமைக்க வேண்டும்

நகரில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் தங்களுக்கு சொந்தமான இடத்தில், மழை நீர் தொட்டி அமைக்க வேண்டும். மாடிகளிலிருந்து வெளியேறும் மழை நீரை தொட்டியில் சேமிக்க வேண்டும், அந்த தொட்டி நிரம்பிய பின், அது மழை நீர் கால்வாய் வழியாக வெளியேற்றும் வகையில் மழை நீர் தொட்டி கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இதனை சரியாக கடைப்பிடிக்க வில்லை என்றால் மழையின் போது, 'மேனுவல்' நிரம்பி சாலையில் வழிந்தோடும் அவல நிலை ஏற்படும். எக்காரணத்தை கொண்டும் மழை நீர் பாதாள சாக்கடை குழாயில் செல்லுமாறு பொருத்த கூடாது. அப்படி பொருத்தியிருந்தால் உடனடியாக அகற்ற வேண்டும்.நகராட்சி கமிஷனர் ஏகராஜ் கூறுகையில், ''ஊட்டி நகரில் உள்ள குடியிருப்பு வாசிகள், காட்டேஜ், தங்கும் விடுதி, ஓட்டல், வணிக நிறுவன உரிமையாளர்கள் எக்காரணத்தை கொண்டும் மழை நீரை பாதாள சாக்கடைக்குள் செல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். ''மழை நீரை சேமிக்க தனியாக தொட்டி அமைக்க வேண்டும். அதற்காக கட்டடங்களில் மழை நீர் சேமிப்பு தொட்டி அமைத்து நகராட்சிக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்,'' என்றார்.

இணைப்பு துண்டிக்கப்படும்!

நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'ஊட்டியில் நகராட்சி பொறியாளர் மற்றும் பொது சுகாதார பிரிவு அலுவலர்கள் மூலம் கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு திடீர் ஆய்வு மேற்கொள்ளும் போது, பாதாள சாக்கடை இணைப்புக்குள் மழை நீர் செல்லும் வகையில் குழாய் பொருத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், பொது சுகாதார சட்டப்படி அபராதம் விதிப்பதுடன், கட்டடத்தின் பாதாள சாக்கடை இணைப்புகளை துண்டிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை