கல்லுாரியில் முதுநிலை பாட பிரிவுக்கான சிறப்பு கலந்தாய்வு
ஊட்டி; ஊட்டி அரசு கலை கல்லுாரியில் முதுநிலை பாடப்பிரிவுகளில் சேர விண்ணப்பித்தவர்களுக்கான கலந்தாய்வு வரும்,11, 13-ம் தேதிகளில் நடக்கிறது. ஊட்டி அரசு கலை கல்லுாரியில் முதுநிலை பாடப்பிரிவுகளான, 'எம்.ஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், எம்.காம்., எம்.காம் (சிஏ,)., எம்.காம்,(ஐபி,)., எம்.எஸ்.சி, தாவரவியல், வேதியியல், விலங்கியல், கணிதவியல், இயற்பியல், வனவிலங்கு உயிரியல், கணினி அறிவியல்,' உட்பட, 14 பாடப்பிரிவுகள் உள்ளன. 2025--26ம் கல்வியாண்டில் முதுநிலை பாடப்பிரிவுகளில் சேர, www.tngasa.inஎன்ற ஆன்லைன் மூலம் ஏராளமான மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர். இந்நிலையில், முதுநிலை பாடப்பிரிவுகளில் சேர்வதற்கான அனைத்து மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு மற்றும் பொது கலந்தாய்வு மாணவர் சேர்க்கை இன சுழற்சி அடிப்படையில் நடக்க உள்ளது. சிறப்பு கலந்தாய்வு இதன்படி, வரும், 11ம் தேதி அனைத்து பட்ட மேற்படிப்பு கலை, அறிவியல் மற்றும் வணிக வியல் பாடப்பிரிவுகளுக்கு சிறப்பு கலந்தாய்வு நடக்கிறது. அதில், மாவட்டம், மண்டலம் மற்றும் அதற்கு மேலான நிலையில் சான்றிதழ் வைத்திருப்பவர்கள், முன்னாள் ராணுவம், பாதுகாப்பு படை வீரர்களின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள், அந்தமான் நிக்கோபார் மற்றும் என்.சி.சி., மாணவர்களுக்கான சிறப்பு கலந்தாய்வு கல்லுாரி உள் கலையரங்கில் நடக்க உள்ளது. 13ம் தேதி பொது கலந்தாய்வு சம்பந்தப்பட்ட துறைகளில் நடக்கிறது. கலந்தாய்விற்கு வரும்போது 'ஆன்லைனில்' விண்ணப்பித்த படிவம், மாற்று சான்றிதழ், சாதி சான்று, 10,11,12 வகுப்பு மதிப்பெண் சான்று, பட்டப்படிப்பில், 5 பருவங்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் உட்பட உரிய ஆவணங்களை எடுத்து வர வேண்டும். ரத்த வகை குறித்த விவரம், யு.எம்.ஐ.எஸ்., எண் அவசியம் தெரிவிக்க வேண்டும். சிறப்பு கலந்தாய்வில் கலந்து கொள்பவர்கள் அதற்கான சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும். பாரதியார் பல்கலைகழக இணைப்பில் உள்ள கல்லுாரிகளில் படித்து பட்டம் பெற்றவர்களுக்கான கட்டணம் தோராயமாக, 3,500 ரூபாய், இணைப்பு பெறாத கல்லுாரியில் படித்து பட்டம் பெற்றவர்களுக்கான கட்டணம், 4,600 ரூபாயாகும். 'முதுநிலை பிரிவுகளுக்கு, 20ம் தேதி கல்லுாரி திறக்கப்படும்,' என, முதல்வர் ராமலட்சுமி கூறினார்.