சாய் கைலாஷில் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் பிறந்த நாள் விழா; 108 திருவிளக்குகள் ஏற்றி வழிபாடு
குன்னுார்; குன்னுார் எல்லநள்ளி சாய் கைலாஷில் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின், 99வது பிறந்தநாள் விழா கோலாகாலமாக கொண்டாடப்பட்டது.குன்னுார்- ஊட்டி சாலை எல்லநள்ளியில்,'சாய் கைலாஷ்' என, அழைக்கப்படும் ஸ்ரீ சத்யசாய் பாபா மந்திரில் சாய்பாபாவின், 99வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. காலை, 5:30 மணிக்கு ஓம்காரம், சுப்ரபாதம், சங்கீர்த்தனம் இடம் பெற்றது. காலை, 9:30 மணிக்கு கொடியேற்றம் காலை, 10:30 மணிக்கு சத்யசாய் சகஸ்ரநாம அர்ச்சனை, காலை, 11:00 மணிக்கு வேதபாராயணம் நடந்தது.சிறப்பு நிகழ்ச்சியாக, 30 நாடுகளில் சாய் பஜனை நிகழ்ச்சிகளை நடத்திய, ஹைதராபாத் டாக்டர் சிவப்பிரசாத் கோமரவளு குழுவினரின் சாய் பஜனை நிகழ்ச்சி இடம் பெற்றது. இவர், தனது சுவாசத்தை கட்டுப்படுத்தி, ஒரு மணி நேரம் 'விசில்' சப்தத்தில் 'கர்னாடிக்' பக்தி பாடல்களை பாடியது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.சாய்பாபா பல்கலைக்கழகத்தில் பயின்ற முன்னாள் மாணவர் கோவையை சேர்ந்த ராஜிவ் பேசுகையில், ''உலகம் முழுவதும், 162 நாடுகளில் சாய்பாபாவின் அவதார வைபவம் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சாய்பாபாவின் ஆசியும், பெருமையும் எண்ணில் அடங்காதது,'' என்றார். நிகழ்ச்சியில், 9 ஆண்கள் மற்றும் 9 பெண்களுக்கு வஸ்திர தானம் செய்யப்பட்டது. தொடர்ந்து, மாவட்ட சாய் பஜனை குழுவினரின் பஜனை, மங்கள ஆரத்தி நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, 'சமஸ்தோ லோகா; சுகிநோ பவந்து,' என்ற ரிக் வேதத்தின் சாரத்தின் படி, உலக நன்மைக்காக கலசங்களை வைத்து, 108 திருவிளக்குகள் ஏற்றி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை எல்லநள்ளி, 'சாய் கைலாஷ்' நிர்வாகிகள் செய்திருந்தனர்.