| ADDED : செப் 09, 2026 06:03 PM
பந்தலுார்: பந்தலுார் அருகே உப்பட்டி பஜாரில் செயல்படும் கழிவறை, கடும் துர்நாற்றம் வீசுவதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட உப்பட்டி பஜாரில், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கழிவறை பயன் இல்லாமல், குப்பைகள் கொட்டும் அறையாக மாறி உள்ளது. இந்நிலையில், பஜாரின் மையப்பகுதியில் மீண்டும், நகராட்சி சார்பில் கழிப்பறை கட்டப்பட்டது. இதனை முறையாக பராமரிக்க நகராட்சி ஊழியர்களை நியமிக்காததால், கழிவறை பராமரிப்பின்றி கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இந்த பகுதியில் பஸ்சுக்காக மக்கள் காத்திருக்கும் நிலையில், துர்நாற்றத்தால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. உப்பட்டி பகுதியில் இரண்டு கழிப்பறைகள் கட்டப்பட்டும், மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால், அவசர தேவைகளுக்கு பயன்படுத்த முடியாமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பெண்கள், பள்ளி, கல்லுாரி மாணவிகள் அதிகளவில் சிரமப்படுகின்றனர். மக்கள் கூறுகையில்,‘இந்த கழிப்பறையை சுத்தம் செய்து, அதனை பராமரிக்க ஊழியர்களை நியமிக்க வேண்டும்,’ என்றனர்.