மேலும் செய்திகள்
தெரு நாய்கள் தொல்லையால் பாதிப்பு
16-Nov-2024
ஊட்டி; ஊட்டி நகரில் சமீப காலமாக தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால், மக்கள் இடையூறுகளை சந்தித்து வருகின்றனர்.ஊட்டி, சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு நகராட்சிக்கு உட்பட்ட, 36 வார்டுகளில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். தவிர கிராமப்புறங்களில் இருந்து வரும் பொதுமக்கள் உட்பட, சுற்றுலாப் பயணிகளின் வருகையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்நிலையில், சமீப காலமாக, நகரின் முக்கிய சாலைகளில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஊட்டி சேரிங்கிராஸ், ஏ.டி.சி., படகு இல்லம், எட்டின்ஸ் சாலை, மத்திய பஸ் நிலையம், கமர்சியல் சாலை, காந்தள் உள்ளிட்ட பகுதிகளில், கூட்டமாக சுற்றித் திரியும் தெரு நாய்களால், இடையூறு ஏற்பட்டுள்ளது.கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு, நகராட்சி நிர்வாகம் சார்பில், தெருநாய்கள் கருத்தடை செய்யப்பட்டதால், நாய்களின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. இதனை தொடர்ந்து, கருத்தடை செய்யும் நடவடிக்கை கைவிடப்பட்டது. இதனால், நகரப் பகுதியில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் நடந்து செல்வோரை நாய்கள் துரத்துவதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.இதனை உறுதிப்படுத்தும் விதமாக, ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் தாவரவியல் பூங்காவுக்குள் நாய்கள் சுற்றிதிரிகின்றன. இதனால், சுற்றுலா பயணிகள் அச்சமடைந்தனர். எனவே, ஊட்டி நகர பகுதியில் சுற்றித் திரியும் நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது அவசியம்.
16-Nov-2024