சட்டங்கள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்: பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் அறிவுரை
பந்தலுார்; பந்தலுார் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், 'சட்ட எழுத்தறிவு குழு,' துவக்கப்பட்டது. நிகழ்ச்சியில், சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளர் ஷாலினி வரவேற்றார். நீதிபதி பிரபாகரன் தலைமை வகித்து பேசுகையில், ''அனைத்து மக்களுக்கும் சமமான நீதி கிடைக்க வேண்டும் எனும் நோக்கில், அனைவருக்கும் சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதில், மாணவர்கள் மத்தியில் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதன் மூலம் பொதுமக்கள் அறிந்து கொள்ள ஏதுவாக இந்த குழுஅமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் உள்ள உறுப்பினர்கள், நீதிமன்ற செயல்பாடுகளை நேரில் கண்டறியவும், சட்டம் சார்ந்த சந்தேகங்களுக்கு தெளிவு ஏற்படுத்தி கொள்ளவும் முன் வரவேண்டும்,'' என்றார். குழுவின் பொறுப்பாளர் வக்கீல் சிவசுப்ரமணியம் பேசுகையில், ''மாணவர்கள் சட்டங்கள் குறித்து தெரிந்து கொண்டால், பள்ளிக்கூடங்கள்,பொது இடங்கள், கிராமங்கள் உள்ளிட்ட இடங்களில் நிலவும், சட்ட விதிமீறல்கள் குறித்து தெளிவுபடுத்தவும், விதிமீறும் நபர்கள் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வழி ஏற்படுத்தவும் முடியும். எனவே இந்த குழுவில் உள்ள மாணவர்கள் எந்த பயமும் இல்லாமல், சட்டங்களை தெரிந்து கொண்டு அதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முன் வர வேண்டும்,'' என்றார். சட்டங்கள் குறித்து சிறப்பாக பேசிய மாணவி யாசினிக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆசிரியர் சித்தானந்த் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் ஸ்டீவன்சன் நன்றி கூறினார்.