மேலும் செய்திகள்
அரசு பள்ளியில் ஆண்டுவிழா கொண்டாட்டம்
28-Mar-2025
பந்தலுார்; பந்தலுார் அருகே தேவாலா அரசு பழங்குடியினர் உயர்நிலைப் பள்ளியில், கல்வி சீர் நிகழ்ச்சி, முன்னாள் மாணவர்கள் சங்கமம், பள்ளி ஆண்டு விழா நடந்தது.பள்ளி மேலாண்மை குழு தலைவர் மீனம்மாள், பி.டி.ஏ. தலைவர் சிவநேச மலர் ஆகியோர் தேசிய கொடி ஏற்றினர். பட்டதாரி ஆசிரியர்கள் தவமுரளி மற்றும் காருண்யா வரவேற்றனர். முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு, முன்னாள் மாணவரும், கவுன்சிலருமான ஆலன்; ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்.எல்.ஏ., திராவிடமணி ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னாள் மாணவர்களான, எம்.எல்.ஏ., ஜெயசீலன், கவுன்சிலர் சேகர், டாக்டர் யாழினி உள்ளிட்டோர் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசினர். ஆசிரியர்கள் விஷ்ணு தாஸ், அஞ்சலி ஆண்டறிக்கை சமர்ப்பித்தனர். முன்னாள் மாணவர்கள் இணைந்து, பள்ளிக்கு தேவையான பொருட்களை சீர்வரிசையாக எடுத்து வந்து வழங்கினர். தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர்கள் இணைந்து, ஊர் கூடி திருவிழாவில் நடனமாடி மகிழ்ந்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திர பாண்டியன் நன்றி கூறினார்.
28-Mar-2025