தரமற்ற முறையில் பழங்குடிகளின் தொகுப்பு வீடு; தற்காலிகமாக பணியை நிறுத்திய அதிகாரிகள்
பந்தலுார் : பந்தலுார் அருகே ஏரோடு பழங்குடியின கிராமத்தில், தரமற்ற முறையில் கட்டப்பட்ட தொகுப்புவீடு பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.நெல்லியாளம் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பந்தலுார் ஏரோடு மற்றும் வாழவயல் பகுதிகளில், பழங்குடியின மக்களுக்கு 'தாட்கோ' சார்பில் தொகுப்பு வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டது. அதில், ஏரோடு பகுதியில், 17 வீடுகள்; வாழவயல் பகுதியில், 3- வீடுகளும் தலா, 5.73 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டும் பணி துவக்கப்பட்டது. இந்நிலையில், 'ஒப்பந்ததாரர் வீடு கட்டும் பணியை தரமற்ற முறையில் மேற்கொண்டு வருவதாகவும், சிறிய அளவிலான அறைகளை மட்டுமே கட்டுவதாகவும் புகார் எழுந்தது.தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பகுதிகளில், கூடலுார் ஆர்.டி.ஓ., செந்தில்குமார் தலைமையிலான அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். ஆர்.டி.ஓ., கூறுகையில், 'ஆய்வின் போது தரமற்ற முறையில் தொகுப்பு வீடுகள் கட்டுவது தெரிய வந்தது. எனவே தற்காலிகமாக குடியிருப்புகள் கட்டும் பணியை நிறுத்தி வைக்க வேண்டும். குடியிருப்புகள் கட்டுவதற்கான அளவு மற்றும் உத்தரவு கடிதங்களை நேரில் சம்பந்தபட்ட ஒப்பந்ததாரர் சமர்ப்பித்து, அதற்கு பின்னர் விதிமுறைகளுக்கு உட்பட்டு தரமான முறையில், வீடுகள் கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,' என்றார். உடனடியாக வீடுகள் கட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.பழங்குடியினர் கூறுகையில், 'மாவட்ட கலெக்டர் தரமான முறையில் குடியிருப்புகளை கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.