உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பந்தலுாரில் பழங்குடியினர் வசிக்கும் கிராம சாலையில் திடீர் தடை! நடமாட முடியாமல் தவிக்கும் மண்ணின் மைந்தர்கள்

பந்தலுாரில் பழங்குடியினர் வசிக்கும் கிராம சாலையில் திடீர் தடை! நடமாட முடியாமல் தவிக்கும் மண்ணின் மைந்தர்கள்

பந்தலுார்: பந்தலுார் அருகே நாச்சேரி பழங்குடியினர் கிராமத்திற்கு செல்லும், சாலை மற்றும் நடைபாதையில் தனியார் தோட்ட நிர்வாகத்தினர் தடுப்பு ஏற்படுத்தி உள்ளதால், வெளியே வர முடியாமல் பழங்குடியின மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதிகளில் குரும்பர், பணியர், காட்டு நாயக்கர் சமுதாய பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில், வனப்பகுதிகள், அதனை சார்ந்து காட்டுநாயக்கர் சமுதாய மக்கள் வாழ்ந்து வரும் நிலையில், எந்தவிதமான அடிப்படை வசதிகளும் கிடைக்காமல் பல கிராமங்கள் உள்ளன.இந்நிலையில், பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட, நாச்சேரி பழங்குடியினர் கிராமத்தில், காட்டுநாயக்கர் சமுதாயத்தை சேர்ந்த, 25 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு, அய்யன்கொல்லி -எருமாடு செல்லும் சாலையில் இருந்து பிரிந்து செல்லும் சாலையை பல தலைமுறைகளாக பழங்குடியின மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

திடீர் தடையால் பாதிப்பு

இந்நிலையில், வனத்திற்கு மத்தியில் செல்லும் சாலையின் முகப்பு பகுதியில், 'தனியார் சாலை' என்று அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. அதனையும் கடந்து சென்றால் ஒரு பகுதியில் தனியார் தோட்டம் மற்றும் மறுபகுதியில் பழங்குடி மக்களுக்கான நிலத்திற்கு மத்தியில் மேலும் ஒரு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. அதனை கடந்து, ஒற்றையடி பாதையில் கிராமத்திற்கு செல்லும் நிலையில், அதனை தடுக்கும் விதமாக, தற்போது அப்பகுதியில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.'மண்ணின் மைந்தர்களான பழங்குடியின மக்கள் காலங்காலமாக கிராமத்திற்கு சென்று வர யாரும் எந்த தடையும் ஏற்படுத்த கூடாது,' என்ற உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில், இந்த பகுதி மக்கள் செல்வதற்கு மூன்று இடங்களில் தடை ஏற்படுத்தி உள்ளனர். இப்பகுதி மக்களுக்கு வீடு கட்டுவதற்கான அரசின் உத்தரவு கிடைத்தும், கட்டுமான பொருட்களை கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வருவாய் துறையினர் ஆய்வு

இதை தொடர்ந்து, பழங்குடியினர் வருவாய் துறையினரிடம் அளித்த புகாரில்,'மண்ணின் மைந்தர்களான பழங்குடியின மக்கள் வாழும் பகுதியில், பல தலைமுறைகளாக பயன்படுத்தி வரும் சாலை மற்றும் நடைபாதையை தடுத்து ஏற்படுத்தியுள்ள தடுப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பு சுவர் அமைக்கும் பகுதியில் மக்கள் நடந்து செல்ல ஏதுவாக நடைபாதை ஒதுக்கி தர வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து, வருவாய் ஆய்வாளர் கவுரி, வி.ஏ.ஓ., யுவராஜ் ஆகியோர் ஆய்வு செய்து உள்ளனர். தாசில்தார் சிராஜூநிஷா கூறுகையில்,''பழங்குடி மக்களின் கிராமத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அனுப்பப்படும். அதன் அடிப்படையில் பழங்குடியின மக்களின் சாலை மற்றும் நடைபாதை பிரச்னைக்கு உரிய தீர்வு காணப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை