சிறுமி பாலியல் வன்கொடுமை; வாலிபருக்கு ஆயுள் தண்டனை
கோத்தகிரி; நீலகிரி மாவட்டம், கீழ்கோத்தகிரி தும்பிமலை பகுதியை சேர்ந்தவர் முரளி,31. இவர், 2020, ஜன., 28ம் தேதி, கோத்தகிரி பகுதியை சேர்ந்த,15 வயது சிறுமியுடன் பழகி, அவரை பலவந்தமாக அவரது காரில் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள், குன்னுார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி வழக்கு பதிவு செய்து, முரளியை கைது செய்தார். ஊட்டி மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. நீதிமன்ற விசாரணை முடிந்து, நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, மகளிர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் தீர்ப்பளித்தார்.