உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோவில் திருவிழா; பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோவில் திருவிழா; பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்

குன்னுார்; நீலகிரியின் பல்வேறு பகுதிகளிலும் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.குன்னுார் தந்தி மாரியம்மன் கோவிலில் நேற்று சந்திரா குடியிருப்பு பகுதி பொதுமக்கள் சார்பில், 18வது ஆண்டு தேர்திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.காலை, 8:00 மணிக்கு, கரோலினா மாகாளியம்மன் கோவிலிலிருந்து தவில், நாதஸ்வரம், கேரள சிங்காரி மேளம், அம்பலக்காவடி, பிளவர் டான்ஸ், தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட 'டைனோசர்' உருவம் ஆகியவற்றுடன், அபிஷேக பொருட்கள் மற்றும் தீர்த்த குடம் ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. சந்திரா குடியிருப்பு பகுதி வளாகத்தில் அன்னதானம், நெருப்புடன் விளையாடும் பகவதி, தையம், சிங்காரி மேளம், வானவேடிக்கை உள்ளிட்டவை நடந்தன. மாலையில், மாரியம்மன் சர்ப்ப வாகனத்தில் எழுந்தருளிய தேர் ஊர்வலம், சந்திரா காலனியை அடைந்தது. ஏற்பாடுகளை, சந்திரா காலனி விழா குழுவினர் செய்திருந்தனர். கூடலுார், கோழிப்பாலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில், நேற்று, காலை சிறப்பு பூஜையும், அம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. மதியம், 12:30 மணிக்கு, இரும்புபாலம் பகுதியிலிருந்து பறவை காவடி ஊர்வலம் துவங்கியது. அதில் பக்தர்கள் பால்குடம் எடுத்து, வேல் பூட்டியும், பறவைகாவடி பூட்டியும் பங்கேற்றனர். ஊர்வலம் கோழிப்பாலம் வழியாக சென்று கோவிலில் நிறைவடைந்தது. தொடர்ந்து, கோவிலில் பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இன்று, காலை முதல் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு திருத்தேர் ஊர்வலம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டி மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர். மஞ்சூர் அருகே, மஞ்சகொம்பை மானியாட கோவிலில் ஆண்டுதோறும் பூ குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. நடப்பாண்டின், 51வது பூ குண்டம் திருவிழா நேற்று நடந்தது. காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜை நடந்தது.பூ குண்டம் நிகழ்ச்சியை படுக தேச பார்ட்டி நிறுவனத் தலைவர் மஞ்சை மோகன் , ஆரூர் தலைவர் சுரேஷ் துவக்கி வைத்தனர். 48 நாட்கள் விரதம் மேற்கொண்ட, 800க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.பக்தர்களின் ஆடல் பாடல், பஜனை நிகழ்ச்சி நடந்தது. அன்னதான நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் ராஜேஷ் மணிகண்டன் செய்திருந்தார். பக்தர்களின் வசதிக்காக ஊட்டி, குன்னுாரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. கோத்தகிரி கடைவீதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் விழாவின் ஒரு நிகழ்வாக, கோத்தகிரி கேம்ப்லைன் மக்கள் சார்பில் விழா நடத்தப்பட்டது. காலை, 10:00 மணிக்கு, கடைவீதி அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோவிலில் இருந்து, பால்குட ஊர்வலம் நடந்தது.தொடர்ந்து, அம்மனுக்கு அபிஷேக அலங்கார வழிபாடு நடந்தது. பகல், 1:00 மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு, நாக சர்ப வாகனத்தில் எழுந்தருளி, அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை