அமைச்சர் வருகையால் துாய்மையான பஜார் பகுதி
பந்தலுார் ; பந்தலுார் பஜார் பகுதியில் நாள்தோறும் ஒரு மணி நேரம் மட்டும் துாய்மை பணி மேற்கொள்ளப்படுவது வழக்கம். இதனால், பஜார் பகுதியில் முழுவதும் குப்பைகள் நிறைந்து, சுகாதாரமற்ற நிலையில் காணப்படும். இந்நிலையில், நேற்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் சாமிநாதன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பந்தலுாருக்கு வந்தார். இதை தொடர்ந்து, நேற்று காலை, 6:00 மணி முதல், மாலை வரை நகராட்சி கமிஷனர் முனியப்பன் நேரடி மேற்பார்வையில், நகராட்சி துப்புரவு பணியாளர்கள், கட்சி நிகழ்ச்சி நடக்கும் பகுதி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் துாய்மை பணியில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் 'பளிச்' என மாறியது. மக்கள் கூறுகையில், 'பந்தலுார் பஜார் பகுதியில் நாள்தோறும் தொடரும் சுகாதார சீர்கேடு குறித்து, அனைத்து தரப்பு மக்கள் மற்றும் வியாபாரி சங்கங்கள் தொடர்ந்து புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. அமைச்சர் வருகையால் கமிஷனர் நேரில் வந்து, துாய்மை பணிகளை மேற்பார்வையிடுகிறார். இந்த நிலை நாள்தோறும் தொடர்ந்தால் நன்றாக இருக்கும்,' என்றனர்.