உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குடியிருப்புகளை இடித்து தள்ளிய புல்லட் யானை; வீட்டின் பின்பக்க வாசலில் சென்று உயிர் தப்பிய பெண்கள்

குடியிருப்புகளை இடித்து தள்ளிய புல்லட் யானை; வீட்டின் பின்பக்க வாசலில் சென்று உயிர் தப்பிய பெண்கள்

பந்தலுார்; பந்தலுார் அருகே தட்டாம்பாறை, கோட்டப்பாடி பகுதிகளில், 'புல்லட்' எனப்படும் காட்டு யானை குடியிருப்புகளை இடித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். பந்தலுார் அருகே அய்யன்கொல்லி மற்றும் அதனை ஒட்டி உள்ள தட்டாம்பாறை, கோட்டைப்பாடி பகுதிகள் பிதர்காடு; சேரம்பாடி வனச்சரக எல்லை பகுதியில் அமைந்துள்ளன. இந்த பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, யானைகள் முகாமிட்டுள்ளன. வெளியிடங்களுக்கு பணிக்கு சென்று கிராமத்துக்கு திரும்பும் தொழிலாளர்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் நடந்து செல்வதில் சிக்கல் நீடிக்கிறது.

அரிசி மூட்டை 'அபேஸ்'

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தட்டாம்பாறை பகுதியில் யானை கூட்டம் முகாமிட்ட நிலையில், வனத்துறையினர் சம்பவத்திற்கு சென்று யானைகளை விரட்டி பொதுமக்கள் வீடுகளுக்கு செல்ல பாதுகாப்பு அளித்தனர். எனினும், அன்று இரவு குடியிருப்பு பகுதிக்குள் சென்ற 'புல்லட்' யானை கிருஷ்ணசாமி என்பவருக்கு வீட்டு கதவை உடைத்து, உள்ளே வைத்திருந்த அரிசி முட்டை உட்பட உணவு பொருட்களை எடுத்து சென்றது. மீண்டும் வனத்துறையினர் அங்கு சென்று யானையை விரட்டினர். கூரை மீது ஏறி உயிர் தப்பிய கிருஷ்ணசாமி கீழே இறங்கும் போது தடுமாறி விழுந்து காயமடைந்து சிகிச்சை பெற்றார்.

உயிர் தப்பிய மூன்று பெண்கள்

நேற்று முன்தினம் இரவு வந்த யானை, இதே வீட்டின் கதையை உடைத்து உணவு பொருட்களை தேடி உள்ளது. பின்னர் கோட்டைப்பாடி பழங்குடியின கிராமத்திற்கு வந்த யானை, மேதி என்ற பழங்குடியினர், வீட்டு சுவரை இடித்து 'டிவி; சேர்' மற்றும் பொருட்களை உடைத்தது. கதவை உடைத்த போது சப்தம் கேட்டு, உள்ளே உறங்கி கொண்டிருந்த மேதி மற்றும் அவரின் பேத்திகள் உஷா, புஷ்பா ஆகியோர் வீட்டின் பின்பக்க கதவை திறந்து கொண்டு, அருகில் இருந்த உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்தனர். அவர்களை தேடி அருகில் இருந்த வீட்டிற்கு சென்ற யானை சமையலறையின் மேற் கூரையை உடைத்து பொருட்களை எடுக்க முயன்றுள்ளது. தகவல் அறிந்த வனத்துறையினர் அப்பகுதிக்கு வந்து யானையை விரட்டினர். யானை எஸ்டேட் பகுதிக்கு சென்றது.பாதிக்கப்பட்ட குடியிருப்புகளை நேற்று காலை வனச்சரகர் ரவி தலைமையிலான வனக்குழுவினர் ஆய்வு செய்ததுடன், முதல் கட்டமாக இரண்டு வீடுகளுக்கும் கதவு வாங்கி கொடுத்தார். 'பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் பெற்று தரப்படும்,' என, உறுதி அளித்தார். மக்கள் கூறுகையில்,'கடந்த ஒரு வாரமாக இப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இங்குள்ள கிராமங்களில் உலா வரும் 'புல்லட்'யானை மூன்று நாட்களில் மூன்று வீடுகளை இடித்துள்ளது. உணவு பொருட்கள் எடுத்து சென்றது. கும்கி யானைகள் உதவியுடன் இதனை அடர் வனத்திற்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ