கூடலுார்:கூடலுாரில் புதிய மின் இணைப்பு கொடுக்க தாமதம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.கூடலுார் பகுதியில், பட்டா இடத்தில் புதிதாக வீடு கட்டுபவர்கள், அரசு துறையிலும் தடையில்லா சான்று பெற்று, புதிய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்த, ஓரிரு வாரங்களில், புதிய மின் இணைப்பு வழங்கப்படுவது வழக்கம்.ஆனால், கடந்த இரண்டு மாதமாக, புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பித்தவர்களிடம், மின்துறையினர், 'மீட்டர் இருப்பு இல்லை' என, கூறி புதிய மின் இணைப்பு வழங்க தாமதப்படுத்தி வருவதால், அதிருப்தி அடைந்துள்ளனர். மக்கள்கூறுகையில், 'கூடலுாரில் புதிய வீடுகளுக்கு, மின் இணைப்பு கேட்டு முறையாக விண்ணப்பித்து, இரண்டு மாதங்களாகியும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை.அதிகாரிகளிடம் கேட்டால், 'மீட்டர் இருப்பு இல்லை' என, கூறி, புதிய மின் இணைப்பு வழங்க தாமதப்படுத்தி வருகின்றனர். எனவே, புதிய, மின் இணைப்புகளை உடனடியாக வழங்க வேண்டும்,' என்றனர். அதிகாரிகள் கூறுகையில் , 'ஓரிரு மாதமாக புதிய மீட்டர் வருவது தாமதம் ஏற்பட்டுள்ளது. புதிய மீட்டர் வந்தவுடன், மின் இணைப்பு வழங்கப்படும்,' என்றனர்.
உதிரி பாகங்கள் இல்லை?
மின் ஊழியர்கள் கூறுகையில்,'கூடலுார் பகுதிக்கு புதிய மீட்டர் மட்டுமின்றி, மின் துறையின் அவசர தேவைக்கு தேவையான மின் உதிரி பாகங்களும், கடந்த சில மாதமாக, முறையாக சப்ளை இல்லை. இதனால், மின் சப்ளையில் பிரச்னை ஏற்பட்டால், அதனை சீரமைக்க, சிரமம் உள்ளது,' என்றனர்.