முதல்வரால் திறக்கப்பட்ட புதிய மருத்துவமனை பயன்பாட்டுக்கு வந்தது! நோயாளிகளுக்கு அரசு பஸ் வசதி, குடிநீர் அவசர அவசியம்
ஊட்டி அருகே கால்ப் கிளப்; பட்பயர் பகுதியில், 45 ஏக்கர் பரப்பளவில், 494 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 700 படுக்கை வசதிகளுடன் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை கட்டப்பட்டது. மருத்துவ கல்லுாரி பணி கடந்த, 2023ம் ஆண்டு முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. மருத்துவமனைக்கான கட்டுமான பணி நிறைவடைந்ததை அடுத்து கடந்த, 6ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். என்னென்ன பிரிவுகள்
புதிய அரசு மருத்துவமனையில் உடல்கூறு பிரிவு, உடலியல் பிரிவு, நுாலக பிரிவு, நோயியல் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை அரங்கு, மயக்கவியல், உயர் தொழில்நுட்ப பரிசோதனை மையம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. இங்கு, பழங்குடியினருக்கு, 50 படுக்கைகளுடன் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. பழங்குடியின மக்களிடையே அதிக அளவில் காணப்படும் சிக்கில்செல் அனீமியா, தலசிமீயா நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முதலில் நிறைவேற்றணும்
இங்கு கல்லுாரி முதல்வர், டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கான குடியிருப்பு, மாணவர்களுக்கு விடுதி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு, நாள்தோறும் அதிகளவில் குடிநீர் தேவைப்படுகிறது. மருத்துவமனை,கல்லுாரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள போர்வெல் மூலம், 25 சதவீதம் தண்ணீர் தேவையை மட்டும் பூர்த்தி செய்ய முடிகிறது. அருகிலுள்ள காமராஜர் சாகர் அணையில் இருந்து, 3 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பணியை மருத்துவ மனை நிர்வாகம் உடனடியாக மேற்கொண்டால் மட்டுமே மருத்துவமனையின் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. அரசு மருத்துவக் கல்லுாரி டீன் கீதாஞ்சலி கூறுகையில்,''அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை இன்று (நேற்று) முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.ஜெயில்ஹில் பகுதியில் குழந்தைகள்பிரிவு; மார்க்கெட் பகுதியில் சேட் அரசு மகப்பேறு மருத்துவமனை மட்டும் செயல்படும். பிற மருத்துவ பிரிவு அனைத்தும் புதிய அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் செயல்படுகிறது. குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை சமாளிக்கும் வகையில் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குடிநீர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு காணப்படும்,'' என்றார்.
அடிப்படை வசதி தேவை
இந்த புதிய மருத்துவமனை அமைந்துள்ள இடத்திற்கு மாவட்டத்தில் தொலை துார பகுதியில் இருந்து மக்கள் வருகின்றனர். கூடலுார், பந்தலுார் மக்கள் பிங்கர் போஸ்டில் இறங்கும் வகையில், பஸ் வசதி உள்ளது. அதே சமயம், ஊட்டி புறநகர் கிராமங்கள், குன்னுார், மஞ்சூர், கோத்தகிரி, ஊட்டி சுற்று வட்டார பகுதி மக்கள் ஊட்டி நகரிலிருந்து, 6 கி.மீ., தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு வர வேண்டிய நிலை இருப்பதால், மாவட்ட நிர்வாகம் மருத்துமனைக்கு கூடுதல் அரசு பஸ்களை இயக்க வேண்டும்; அப்பகுதியில் நிழற்குடை அமைக்க வேண்டும்.