உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாலைகளின் அவல நிலை: கண்டுகொள்ளாத நெடுஞ்சாலைத்துறை

சாலைகளின் அவல நிலை: கண்டுகொள்ளாத நெடுஞ்சாலைத்துறை

பந்தலூர்: சாலைகளின் அவல நிலைகளை நெடுஞ்சாலை துறையினர் கண்டுகொள்ளாமல் இருப்பதால் பிற மாநில வாகன ஓட்டிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பந்தலூர் மற்றும் கூடலூர் பகுதிகளில், நெடுஞ்சாலைகள் குழிகளாக மாறி வருவது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், கண்டுகொள்ளாதது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கூடலூர், பந்தலூர் பகுதிகள், தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா சாலைகளை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலைகள் மற்றும் கிராமப்புற சாலைகளாக உள்ளன. தினமும் உள்ளூர், வெளி மாநில, வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணியர், உள்ளூர் வாகனங்கள் அதிகளவில் வந்து செல்கிறது. வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரி எல்லைக்குள் வரும், வாகனங்களுக்கு நுழைவு வரியும் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், சாலைகள் அனைத்தும் குழிகளாக மாறி சேதமடைந்து காணப்படுகிறது. கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் போதிய, மருத்துவ வசதி இல்லாத நிலையில் மருத்துவ தேவைகளுக்கு, கேரளா மாநிலம் சுல்தான் பத்தேரி, கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. நோயாளிகளின் அவசர தேவைக்கு மருத்துவமனைக்கு செல்வதற்குள் நோயாளிகளின் உடல்நிலை மோசமடைகிறது. சாலைகளில் பல இடங்கள் குண்டும், குழியுமாக காட்சியளிப்பதால் வாகனங்களும் அடிக்கடி பழுதாகி நடு வழியில் நின்று விடுகிறது. நெடுஞ்சாலைத்துறை சாலை சீரமைப்புக்கு போதிய அக்கறை காட்டாததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகள், தமிழக அரசை திட்டி தீர்ப்பதுடன், நுழைவு வரி வாங்கும் சோதனைச் சாவடி பணியாளர்களிடம், வாக்குவாதத்திலும் ஈடுபடுகின்றனர். சில இடங்களில் பொதுமக்கள் தற்காலிகமாக சாலைகளை சீரமைத்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து உத்தரவிட வேண்டும்.என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை