சுகாதார மையத்தில் இடவசதி இல்லை; திறந்த வெளியில் காத்திருக்கும் நோயாளிகள்
கூடலுார்,; கூடலுார் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சுகாதார மையத்தில் இட வசதி இல்லாததால் நோயாளிகள், திறந்த வெளியில் காத்திருந்து, சிகிச்சை பெற்று செல்கின்றனர். கூடலுார் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, உழவர் சந்தையை ஒட்டி நகர அரசு சுகாதார மையம் செயல்பட்டு வருகிறது. மைய கட்டடத்தில் இடவசதி இல்லை. அங்கு மருந்து உள்ளிட்ட பொருட்கள் வைக்கவும், ஊழியர்கள் பணியாற்ற போதுமான இட வசதியின்றி சிரமப்பட்டு வருகின்றனர். நோயாளிகளும் கட்டடத்தின் வெளியே, நகராட்சி ஊழியர்கள் குடியிருப்பு செல்லும் சாலையில் திறந்த வெளியில் காத்திருந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில், மைசூரு தேசிய நெடுஞ்சாலை புதிய கோர்ட் அருகே, 1.20 கோடி ரூபாய் செலவில் புதிய நகர சுகாதார மையத்துக்கு, புதிய கட்டடம் கட்டும் பணி கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. இதுவரை பணிகள் முழுமை பெறவில்லை. நோயாளிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். நோயாளிகள் கூறுகையில், 'தற்போது, நகர சுகாதார மையத்தில், இடவசதி இன்றி நோயாளிகள் திறந்த வெளியில் காத்திருந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். தற்போது பருவமழை காலம் என்பதால், பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறோம். எனவே, புதிய கட்டடப் பணிகளை விரைந்து முடித்து, நகர சுகாதார மையத்தை அங்கு மாற்ற வேண்டும்,' என்றனர்.