சிறுமியை தொந்தரவு செய்த இளைஞருக்கு மூன்று ஆண்டு சிறை
ஊட்டி; ஊட்டியில் வசிக்கும் பெண் ஒருவர் குழந்தைகள் நல குழும தலைவரிடம் கடந்த, 2020ல் புகார் மனு அளித்தனர். அதில், 'தனது மகளுக்கு ஊட்டி மிஷனரிஹில் பகுதியை சேர்ந்த சூர்யா,35, என்ற இளைஞர் பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்து வருகிறார். 'தனது மகளுடன் உள்ள போட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன்,' என, மிரட்டுகிறார். தனது குடும்பத்தினருக்கு சில போட்டோக்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டு இருந்தது. குழந்தைகள் நல குழும தலைவர் இந்த புகாரை ஊட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்கு நடவடிக்கைக்காக பரிந்துரைத்தார். இதன் பேரில் வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் கண்மணி, 2012ம் ஆண்டு சூர்யாவை கைது செய்தார். இந்த வழக்கின் விசாரணை, ஊட்டி மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று முன்தினம் நடந்த விசாரணையின் போது, நீதிபதி செந்தில்குமார் தீர்ப்பளித்தார். அதில், சூர்யாவுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை மற்றும், 7 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். மேலும், 'பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக அரசு ஒரு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,' எனவும் உத்தரவிட்டார்.