புலிகள் காப்பக வனப்பகுதி தீ தடுப்பு கோடு அமைக்கும் பணி
பந்தலுார் ; கோடை காலம் துவங்கி உள்ள நிலையில், இரு மாநில புலிகள் காப்பக வனப்பகுதியை காக்கும் வகையில் தீ தடுப்பு கோடு அமைக்கும் பணி நடந்து வருகிறது. கோடை காலம் துவங்கிய உள்ள நிலையில், வனப்பகுதியில் அடிக்காடுகள் காய்ந்து காணப்படுகிறது. இதனால், சாலை ஓரங்களில் வாகனங்கள் வேகமாக செல்லும்போது, அதிலிருந்து எழும் தீ ஜூவாலைகள் மூலம், வனப்பகுதிகளில் எளிதாக தீப்பற்றும். இதனை தடுக்கும் விதமாக முதுமலை புலிகள் காப்பகத்தின், நெலாக்கோட்டை வனச்சரக எல்லைக்கு உட்பட்ட பாட்டவயல் மற்றும் கேரள வயநாடு மாவட்ட எல்லையில் சாலையோர வனப்பகுதியில், ஏற்கனவே அடிக்காடுகள் வெட்டி அகற்றப்பட்டு உள்ளது. தற்போது, அந்த பகுதியில் எதிர் தீ வைத்து, தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.வனத்துறையினர் கூறுகையில், 'வனப்பகுதியில் ஆயிரக்கணக்கான வன விலங்குகள், உயிர் வாழும் நிலையில் பொதுமக்களும் வனத்தை பாதுகாக்க முன் வர வேண்டும். காய்ந்த சருகுகள் உள்ள பதிகளில் தீ வைக்காமல் இருக்க வேண்டும். வனத்துக்கு தீ வைக்கும் சமூக விரோதிகள் குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்,' என்றனர்.