உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கூடலுார், பந்தலுார் பகுதிகளில் மீண்டும் தலை துாக்கும் மரக்கடத்தல்! அனுமதி பெறாமல் வெட்டி சாய்ப்பதால் ஆபத்து

கூடலுார், பந்தலுார் பகுதிகளில் மீண்டும் தலை துாக்கும் மரக்கடத்தல்! அனுமதி பெறாமல் வெட்டி சாய்ப்பதால் ஆபத்து

பந்தலுார்; 'கூடலுார், பந்தலுார் பகுதிகளில் தனியார் மற்றும் வனப்பகுதிகளில் உள்ள பட்டியல் வகை மரங்களை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மலைப்பகுதி மரங்களை பாதுகாப்பதற்காக, 1995-ம் ஆண்டு தமிழ்நாடு மலைபகுதி மரங்கள் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டம், மலைப் பகுதிகளில் மரங்கள் வெட்டுவதை தடுக்கவும், இயற்கை சூழலை பாதுகாக்கவும், மண் அரிப்பபை தடுத்து நீர் வளத்தை பாதுகாக்கவும் வழி ஏற்படுத்தும். சமீப காலமாக, மரம் வெட்டும் விதிமுறைகளை திசைதிருப்பி, மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று, அதன் மூலம் பல மரங்களை வெட்டும் செயல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், தேக்கு, ஈட்டி மரங்கள், கூடலுார், பந்தலுார் பகுதிகளில் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆபத்தான மரம் பெயரில் சாய்ப்பு குறிப்பாக, ஆபத்தான மரங்கள் என்ற போர்வையில் அனுமதி பெறப்பட்டு, அந்த அனுமதியில் குளறுபடிகள் செய்து, தனியார் இடங்களில் வளர்க்கப்படும், பாதுகாக்கப்பட்ட பட்டியலில் உள்ள மரங்களையும் வெட்டி கடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் விடுவதால் மரங்கள் அழிக்கப்பட்டு, கோடை காலங்களில் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்காத நிலை உருவாகி வருகிறது. அதில், தனியார் எஸ்டேட் பகுதிகளில் உள்ள மரங்களை வெட்ட மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழு அனுமதி அளிக்கும் அதே நேரத்தில், வெட்டப்பட்ட மரங்களுக்கு ஈடாக பத்து மடங்கு புதிய மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆனால், கூடலுார், பந்தலுார் பகுதிகளிலும் உள்ள பல தனியார் எஸ்டேட்களில் மரங்களை வெட்டிய பின்பு, மரக்கன்றுகள் வளர்ப்பதை யாரும் பின்பற்றுவதில்லை. கட்சி பாகுபாடில்லை இந்நிலையில், தற்போது, கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதிகளில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி நிர்வாகிகள் சிலர் ஒன்றிணைந்து, மரங்களை வெட்டி சோதனைச் சாவடிகளை கடந்து கேரளா மாநிலத்திற்கு கடத்திச் செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நிலத்தின் உரிமையாளர்களிடம் மரத்திற்கு விலை பேசப்பட்டு, சிறிய தொகை வழங்கப்படுகிறது. 'எந்த பிரச்னை வந்தாலும் நாங்கள் பார்த்து கொள்கிறோம்,' என்ற உத்தரவாதத்தை கொடுக்கும் மரக்கடத்தல் கும்பல், மரங்கள் வெட்டி கடத்தும் போது, வனத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் நிலத்தின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்வதால், மரக்கடத்தல் கும்பல் அரசியல் ஆதாயத்தை பயன்படுத்தி எளிதாக தப்பி விடுகிறது. தற்போது, 'சில குறிப்பிட்ட விதிகளின் கீழ், அனுமதி பெற்று ஈட்டி மரத்தை வெட்டி கொள்ளலாம்,' என்ற உத்தரவு வந்துள்ள நிலையில், தனியார் இடங்களில் உள்ள ஈட்டி மரங்களை விலை பேசும் செயலும் அதிகரித்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் ஏற்கனவே மரங்கள் குறைந்து வரும் வனம் மற்றும் தனியார் தோட்டங்கள், விரைவில் 'மொட்டை காடுகளாக' மாறும் அபாயம் உள்ளது. இதனை தடுக்கும்வகையில், வனத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பட்டியல் வகை மரங்களை காக்கும் வகையில், நிலத்தின் உரிமையாளர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மரக்கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, 'ரோஸ்வுட் கார்டன்' என்று அழைக்கப்படும் இப்பகுதிகளை காக்க முடியும். சுற்றுச்சூழல் ஆர்வலர் திருநாவுக்கரசு கூறுகையில், ''நீலகிரியில் பல அரிய வகை மரங்கள் அழிக்கப்பட்டு பெரும்பாலான பகுதிகள் தோட்டங்களாக மாறி உள்ளது. மீண்டும் இதே நிலை தொடர்ந்தால் கோடை காலங்களில் சமவெளி பகுதியில் மிஞ்சும் அளவிற்கு வெப்பம் மற்றும் தண்ணீர் பஞ்சம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இதனால், அரசு ஈட்டி, தேக்கு உட்பட பட்டியல் வகை மரங்களை காக்க வேண்டும்,'' என்றார்.

விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்

வனச்சரகர் ரவி கூறுகையில், ''வன வளங்களை பாதுகாப்பதில் பொதுமக்களுக்கும் முழு பங்களிப்பு உள்ளது என்பதை உணர வேண்டும். சில இடங்களில் வனத்துறையின் பரிந்துரை இல்லாமலே ஆபத்தான மரங்கள் என வருவாய் துறை மூலம் அனுமதியளிக்கப்படுகிறது. இதனால், குழப்பங்கள் ஏற்படுகிறது. தற்போது மாவட்ட அலுவலர் அறிவுரையுடன் மரங்களையும், வனங்களையும் பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தனியார் இடங்களில் உள்ள மரங்களை முறையான அனுமதியுடன் வெட்ட வேண்டும். விதிமீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !