உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வன விலங்குகளுக்கு இடையூறு; சுற்றுலா பயணிகளுக்கு அபராதம்

வன விலங்குகளுக்கு இடையூறு; சுற்றுலா பயணிகளுக்கு அபராதம்

கூடலுார்; மசினகுடி சாலையோரம் வாகனங்களை நிறுத்தி, வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்திய, மூன்று சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர், 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.'முதுமலை புலிகள் காப்பகம் சாலையோரங்களில் உலா வரும் வனவிலங்குகளின் அருகே, ஓட்டுனர்கள், சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தி இடையூறு ஏற்படுத்த கூடாது,' என, வனத்துறையினர் எச்சரித்து வருகின்றனர்.இந்நிலையில், நேற்று முன்தினம், மாலை தெப்பக்காடு மசினகுடி சாலையில், பயணித்த சுற்றுலா பயணிகள், சாலையோரம் காரை நிறுத்தி, கீழே இறங்கி வனப்பகுதியில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த, மான்கள் அருகே சென்று இடையூறு ஏற்படுத்தினர்.இது தொடர்பான, 'வீடியோ' வைரலாகி உள்ளது. மசினகுடி வனச்சரகர் பாலாஜி மற்றும் வன ஊழியர்கள் அந்த வாகனத்தை பறிமுதல் செய்து,பயணித்த சுற்றுலா பயணிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணைக்கு பின், மசினகுடி துணை இயக்குனர் அருண்குமார் உத்தரவுப்படி, வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்திய, கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த, அப்துல் கலாம்,32, அப்துல் அசிஸ்,22, ஆந்திரா சித்துாரை சேர்ந்த இப்ராஹிம் ஷேக்,22, ஆகியோருக்கு வனச்சரகர் பாலாஜி தலா, 5000 வீதம், 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். அபராத தொகை செலுத்தியதை தொடர்ந்து, காருடன் அவர்களை விடுவித்தனர்.வனத்துறையினர் கூறுகையில், 'முதுமலை சாலை வழியாக பயணிப்பவர்கள், சாலையோரம் வாகனங்களை நிறுத்தி வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது. எச்சரிக்கை மீறி செயல்பட்டால், அபராதம் விதிக்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி