ஹில்டாப் மலை பகுதியில் சுற்றுலா பயணிகள் அத்துமீறல்; கண்காணிப்பில் வனத்துறை; அபராதம் விதித்தும் பயனில்லை
கூடலுார்; கூடலுார் நாடுகாணி அருகே, தடை செய்யப்பட்ட 'ஹில்டாப்' மலைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அத்துமீறும் செயல்களில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.கூடலுார் நாடுகாணி, பாண்டியார் டான்டீ அருகே, தேவாலா அட்டி சாலையை ஒட்டி 'ஹில்டாப்' மலை அமைந்துள்ளது. சாலையில் இருந்து, 500 மீட்டர் நடந்து மலை உச்சிக்கு சென்று, அதனை சுற்றியுள்ள பசுமை மலைகளை சுற்றுலா பயணிகள் ரசித்து வந்தனர். இதனை சுற்றுலா தலமாக மாற்ற வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில், யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியில், சில இளைஞர்கள் ஜோடியாக சென்று அத்துமீறும் செயல்களில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர்.மேலும், 'இப்பகுதி வனத்துறைக்கு சொந்தமானது; இங்கு செல்வது வன சட்டப்படி குற்றம்; அத்துமீறி செல்பவர்கள் மீது வன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,' என, வனத்துறை சார்பில் அறிவிப்பு பலகை வைத்ததுடன், பகல் நேரங்களில் வன ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டு, அங்கு வரும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை திருப்பி அனுப்பி வருகின்றனர்.இந்நிலையில், பணியில் இருக்கும் வன ஊழியர்கள், அவசர தேவை, உயர் அதிகாரிகள் அழைப்பை ஏற்று வன அலுவலகம் சென்று வரும் நேரங்களில் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தடை செய்யப்பட்ட ஹில்டாப் மலைப்பகுதிக்கு சென்று வருகின்றனர். அத்துமீறும் செயல்கள் அதிகரிப்பு
அதில், ஜோடியாக செல்லும் சுற்றுலா பயணிகள், ஆபத்தை உணராது யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிக்கு சென்று வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. இப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.தேவாலா வனச்சரகர் சஞ்சீவ் கூறுகையில், ''இப்பகுதிக்கு, சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. பகல் நேரத்தில் வன ஊழியர்களும், தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தடையை மீறி செல்பவர்களை பிடித்து அபராதம் விதித்து வருகிறோம். கடந்த வாரம் தடை மீது சென்ற, 10 சுற்றுலா பயணிகளுக்கு தலா, 500 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. அத்துமீறும் சுற்றுலா பயணிகள் மீது வனச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,''என்றார்.