துளிர் திறனறிவு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சுற்றுலா வாய்ப்பு
கூடலுார், ; நீலகிரியில், நடந்த துளிர் திறனறிவு தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களை, அறிவியல் சுற்றுலா அழைத்து செல்ல முடிவு செய்துள்ளனர்.தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், கடந்த டிச., 7 மற்றும் 29 தேதிகளில், 4ம் வகுப்பு முதல் பிளஸ்--2 வரை படிக்கும் மாணவர்களுக்கான துளிர் திறன் அறிவு தேர்வுகள் நடந்தது.அதில், 4, 5ம் வகுப்பு மாணவர்கள் துவக்க நிலை பிரிவிலும்; 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் இளநிலை பிரிவிலும்; 9, 10ம் வகுப்பு மாணவர்கள் சீனியர் பிரிவிலும்; பிளஸ்--1, பிளஸ்--2 மாணவர்கள் சூப்பர் சீனியர் பிரிவுகளில், 53 பள்ளிகளை சேர்ந்த 1,462 மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர்.தேர்வு முடிவுகள் வெளியிடும் நிகழ்ச்சி கூடலுாரில் நடந்தது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் சுபாஷினி வெளியிட்டார். தேர்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்கள் அறிவியல் கல்வி சுற்றுலா அழைத்து செல்ல உள்ளனர்.நிகழ்ச்சியில், தமிழ்நாடு அறிவியல் இயக்க நீலகிரி மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன், தலைவர் சங்கர், துளிர் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் செயலாளர் மாணிக்க வாசகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.