ஊட்டி;நீலகிரி அணைகளில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறையால் மின் உற்பத்திக்கு அப்பர் பவானி அணை கை கொடுத்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில், குந்தா; பைக்கார நீர் மின் திட்டத்தின் கீழ், கெத்தை, பரளி, பில்லுார், காட்டு குப்பை, அவலாஞ்சி, பைக்காரா, மாயார், சிங்காரா, குந்தா உள்ளிட்ட, 12 மின் நிலையங்கள் உள்ளன. அப்பர் பவானி, எமரால்டு, போர்த்திமந்து, பைக்காரா, மாயார், குந்தா, கெத்தை, பில்லுார் உள்ளிட்ட, 13 அணை மற்றும் 30 தடுப்பணைகளில் சேமிக்கப்படும் தண்ணீர் மூலம் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. தினசரி, 32 பிரிவுகளில், 833.65 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ளும் திறன் உள்ளது. குறைந்த மழையளவு
கடந்தாண்டில் கோடை மழை, தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை ஆகிய மூன்று கால பருவ மழை பொய்த்தது. நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டு சராசரி மழை, 140 செ.மீ., ஆகும். அதில், 50 செ.மீ., மழை மட்டுமே கடந்த ஆண்டில் பெய்தது. இந்த மழையால் குடிநீர் மலை காய்கறி மற்றும் தேயிலை தோட்டங்களின் தேவை ஓரளவுக்கு பூர்த்தியானது. மின் உற்பத்திக்கு தேவையான அளவு தண்ணீர் அணைகளில் சேமிக்க முடியவில்லை. இருப்பில் இருந்த தண்ணீர் படிப்படியாக மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டதால் பெரும்பாலான அணைகளில் நீர்மட்டம் படிப்படியாக சரிந்தது. நடப்பாண்டிலும் ஜூலை மாதம் துவங்கியுள்ள நிலையில். கோடை மழை மற்றும் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. மழை இல்லாததால் மின் உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டது. கடந்த, 18 மாதங்களில் மின் உற்பத்தி வழக்கத்தை விட சரிந்தது. கை கொடுக்கும் அப்பர் பவானி அணை
மாவட்டத்தில் மின் உற்பத்திக்கு பெரிய அணையாக அப்பர் பவானி அணை உள்ளது. 210 அடி கொண்ட அப்பர் பவானி அணைக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் தண்ணீர் சேமிக்கப்படுகிறது. இந்த அணையில் இருந்து ராட்சத குழாய் மூலம் காட்டு குப்பை, அவலாஞ்சி குந்தா, கெத்தை, பரளி, பில்லுார் ஆகிய மின் நிலையங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. அணையின் உபரி நீர் மின் உற்பத்திக்கு கொண்டு செல்லப்பட்டாலும், பில்லுார் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. கடந்த வாரத்தில் பெய்த தென்மேற்கு பருவ மழையில் அப்பர் பவானியில், 24 செ.மீ., மழை பெய்தது. 10 அடி வரை நீர் மட்டம் உயர்ந்தது. தற்போது, அணையில், 120 அடி வரை தண்ணீர் இருப்பு உள்ளது. தென்மேற்கு பருவ மழை துவங்கி ஒரு மாதம் கடந்த நிலையில் மழைப்பொழிவு எதிர்பார்த்த அளவு இல்லை. இதே நிலை நீடித்தால் அணைகளில் தண்ணீர் இருப்பு மேலும் சரியும் நிலை ஏற்படும். இந்த சூழ்நிலையில், அப்பர் பவானி அணையை நம்பி தான் மின் வாரியம் உள்ளது. பிற அணைகள் விபரம்:
மாவட்டத்தில் மொத்தமுள்ள, 13 அணைகளில், எமரால்டு, அவலாஞ்சி, போர்த்தி மந்து, மரவக் கண்டி உள்ளிட்ட 8 அணைகளில், 70 சதவீத அளவுக்கு தண்ணீர் இருப்பு குறைவாக உள்ளது. கோடை மழை மற்றும் தென் மேற்கு பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. தண்ணீர் இருப்பும் படிப்படியாக குறைந்தது . தண்ணீர் பற்றாக்குறையால் பெரும்பாலான மின் நிலையங்களில் அவ்வப்போது மின் உற்பத்தி நிறுத்தப்படுகிறது. இதன் காரணமாக, கடந்த ஒன்றரை ஆண்டுகள் அணைகளில் போதிய தண்ணீர் இல்லாததால் மின் உற்பத்தி மேற்கொள்வதில் மின்வாரியம் திணறி வருகிறது. மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மாவட்டத்தில் மழை அளவு குறைந்துள்ளது. அணைகளில் இருப்பில் இருந்த தண்ணீரும் படிப்படியாக மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டது. போதிய அளவு தண்ணீர் இல்லாததால் மின் உற்பத்தி மேற்கொள்வதில் சிக்கல் நிலவுகிறது. பருவ மழை தொடர்ந்து பெய்தால் மட்டுமே தீர்வு ஏற்படும்,' என்றனர்.