வழிகாட்டி அறிவிப்பை மறைத்து நிறுத்தப்படும் வாகனங்கள்
கூடலுார்: கூடலுார், நந்தட்டி அருகே சாலையோரம், நெடுஞ்சாலை துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பெயர் பலகையை வாகனங்கள் நிறுத்தி மறைக்கப்படுவதை தடுக்க வலியுறுத்தி உள்ளனர். கேரளாவிலிருந்து கூடலுாருக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்கள் பயன்பெறும் வகையில் வழிகாட்டி பெயர்பலகை வைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில், வழிகாட்டி பெயர் பலகை மறைத்த நிலையில், கனரக வாகனங்களை நீண்ட நேரம் நிறுத்தி செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்நிலையில், கோழிக்கோடு சாலை நந்தட்டி, மாதேஸ்வரன் கோவில் அருகே சுற்றுலா தளங்கள் குறித்து, வழிகாட்டி பெயர் பலகை வைத்துள்ள பகுதியை ஆக்கிரமித்து, சிமென்ட் கற்கள் அடுக்கி வைத்திருப்பதுடன் அடிக்கடி வாகனங்கள் நிறுத்தி, மறைத்து வருகின்றனர். இதனால், ஊட்டி, முதுமலை செல்லும் சுற்றுலா பயணிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.