| ADDED : மார் 03, 2024 10:48 PM
பந்தலுார்:பந்தலுார் அருகே வாகன வசதி இல்லாத பழங்குடியினர் கிராமங்களுக்கு சென்று, மருத்துவ குழுவினர் போலியோ சொட்டு மருந்து கொடுத்தனர்.பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் பழங்குடியின கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களுக்கு செல்ல வாகன வசதிகள் இல்லாத நிலையில், நேற்று போலியோ சொட்டு மருந்து கொடுக்க தங்கள் குழந்தைகளை முகாம்களுக்கு அழைத்து வர முடியாமல், பெற்றோர் சிரமப்பட்டனர்.இதனை அறிந்த, வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் மேற்பார்வையில், அம்பலமூலா அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் ஜெயபிரகாஷ், ரகுராம், சுகாதார ஆய்வாளர் ராமலிங்கம் மற்றும் செவிலியர்கள், மக்களை தேடி மருத்துவ குழுவினர் இணைந்து, பழங்குடியின கிராமங்களுக்கு பல கி.மீ., நடந்து சென்று, 5- வயதுக்கு உட்பட்ட பழங்குடியின குழந்தைகளுக்கு, போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.குறிப்பாக, பாட்டவயல் மற்றும் அம்பலமூலா பகுதி சுற்றுவட்டார பகுதிகளில், இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டது.அரசு குழுவினருக்கு பழங்குடியின பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கதிரவன் கூறுகையில்,''சொட்டு மருந்து கொடுக்காமல், விடுபட்ட பழங்குடியின கிராமங்களுக்கும் சென்று போலியோ சொட்டு மருந்து விரைவில் வழங்கப்படும்,'' என்றார்.