வீடு கேட்டு நடையாய் நடந்தும் பயனில்லை; கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்
பந்தலுார்; பந்தலுார் அருகே, சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட, 9-வது வார்டு பகுதியில் புள்ளமங்கலம் பழங்குடி கிராமம் அமைந்துள்ளது. இங்கு குடியிருப்பவர் பிரசன்னா. இவரது கணவர் ஐயப்பன் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். மகன் பிரதீஷ் கூலி வேலை செய்து வருகிறார்.இவர்களுக்கு சொந்தமாக நிலம் உள்ள நிலையில் அதில் உள்ள வீடு சேதமடைந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், சுவர்கள் கீழே விழாமல் தடுப்புகள் ஏற்படுத்தி வைத்து அதில் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில்,'தங்களுக்கு அரசு தொகுப்பு வீடு கட்டித் தர வேண்டும்,' என, வலியுறுத்தி, கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் தீர்வு கிடைக்கவில்லை. ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், வசதி படைத்த பலருக்கும், அரசு தொகுப்பு வீடுகள் கட்டி தரப்பட்டு வருகிறது. ஆனால், இடிந்து விழும் நிலையில் உள்ள குடியிருப்பை மாற்றி, அரசு தொகுப்பு வீடு கட்டி தருவதில்,அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளதால், பழங்குடியினர் சேதமான வீட்டில் அச்சத்துடன் வசதித்து வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து ஆய்வு செய்து, வீடு முழுமையாக இடிந்து விடும் முன்பாக, தொகுப்பு வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.