தொடரும் மழையால் அணைகளில் 12 அடி வரை நீர் மட்டம் உயர்வு! நிறுத்தப்பட்ட மின் பிரிவுகளில் உற்பத்தி துவக்கம்
நீலகிரி மாவட்டத்தில், 'முக்கூர்த்தி, பைக்காரா, சாண்டிநல்லா, கிளன்மார்கன், மாயார், அப்பர்பவானி, பார்சன்ஸ் வேலி,போர்த்தி மந்து, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா,கெத்தை, பில்லுார்,' ஆகிய, 13 அணைகள் உள்ளன. அதில், குந்தா வட்டத்தில், 'குந்தா, கெத்தை, பரளி, பில்லுார், அவலாஞ்சி, காட்டுக்குப்பை,' என, 6 மின் நிலையங்கள் உள்ளன. பைக்காரா மின் வட்டத்தில், 'முக்கூர்த்தி, பைக்காரா, சிங்காரா, மாயாறு, மரவக்கண்டி, பைக்காரா இறுதி நிலை புனல் மின் நிலையம்,' என, 6 மின் நிலையங்கள் உள்ளன. மின் உற்பத்தி
மாவட்டத்தில் உள்ள, 12 மின் நிலையங்களில் , 833.65 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. இங்கு உற்பத்திசெய்யப்படும் மின்சாரம்ஈரோடு, மதுரை, சென்னை ஆகிய மூன்று மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. பல்வேறு கிராமங்களின் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக, அணைகளின் இருப்பில் இருந்த தண்ணீர் படிப்படியாக பயன்படுத்தப்பட்டதால் கடந்த வாரம் நிலவரப்படி, மாவட்டத்தில் உள்ள அணைகளில், 35 சதவீதம் தண்ணீர் இருப்பில் இருந்தது.தண்ணீர் பற்றாக்குறையால் மின் உற்பத்தி மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டதை அடுத்து, குந்தா, கெத்தை பரளி, பில்லுார், பைக்காரா, மாயாறு, முக்கூர்த்தி, சிங்காரா,' ஆகிய மின் நிலையங்களில், 12 பிரிவுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. நீர் மட்டம் உயர்வு
கடந்த சில நாட்களாக, மாவட்ட முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பொழிவு அதிகரிப்பால் அப்பர் பவானி, அவலாஞ்சி, பைக்காரா அணைகளில் உட்பட பல அணைகளில், 12 அடி வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'நடப்பாண்டில் இதுவரை எதிர்பார்த்த அளவு மழை இல்லை. கடந்த மே, 20ம் தேதி நிலவரப்படி அணைகளில், 35 சதவீதம் அளவுக்கு தண்ணீர் இருப்பில் இருந்தது. அதில், முன் கூட்டியே தென் மேற்கு பருவ மழை துவங்கியதால், கடந்த சில நாட்களாக பெய்த மழைக்கு, 1௨ அடி வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நிறுத்தப்பட்ட சில மின் பிரிவுகளிலும் மின் உற்பத்தி துவங்கியுள்ளது. கூட்டு குடிநீர் திட்டத்தையும் சமாளிக்க முடிகிறது. பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்தால் மின் உற்பத்தியில் சிக்கல் இருக்காது,' என்றார்.