சாலையை மூழ்கடித்த தண்ணீர்: மக்கள் அவதி
பந்தலுார்; பந்தலுார் பஜாரை ஒட்டிய கிராமங்களுக்கு செல்லும் சாலைகளில் மழை நீர் வழிந்தோட வழியில்லாத நிலையில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். நெல்லியாளம் நகராட்சி தலைமையிடமாக பந்தலூர் பஜார் சுற்றுப்புற பகுதிகள் உள்ளன. அதில், நெடுஞ்சாலையில் இருந்து கிராமங்களுக்கு செல்லும் சிறு சாலைகளை நகராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. ஆனால், பெரும்பாலான சாலைகள் சேதமடைந்து, குழிகளாக மாறி உள்ளன. இதனால் வாகனங்கள் வந்து செல்லும் போது சிரமம் ஏற்படுவதுடன், அடிக்கடி பழுதடைந்து நிற்பதும் வாடிக்கையாக உள்ளது. அதில், புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து ஹட்டி செல்லும் சாலைகளில் மழை பெய்தால் தண்ணீர் நிறைந்து சிறு குளமாக மாறி விடுகிறது. சாலையின் நிலை குறித்து தெரியாமல், வாகனங்களை இயக்கும் நிலையில் குழிகளில் சிக்கி கொள்கிறது. மேலும், பாதசாரிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் நடந்து செல்லும் போது, தடுமாறி விழுந்து பாதிக்கப்படுவதுடன், சாலையை கடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே, இந்த பகுதிகளை ஆய்வு செய்து மழைநீர் தேங்கி நிற்காமல் வழிந்தோட வழி ஏற்படுத்தவும் சேதமான சாலைகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.