உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குடிநீர் இணைப்பு துண்டிப்பால் சிக்கல்; அதிகாரிகளை முற்றுகையிட்ட மக்கள்

குடிநீர் இணைப்பு துண்டிப்பால் சிக்கல்; அதிகாரிகளை முற்றுகையிட்ட மக்கள்

பந்தலுார்; பந்தலுார் அருகே சேரம்பாடி சுங்கம் பகுதியில், குடிநீர் இணைப்பை துண்டித்ததால் பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டனர். சேரங்கோடு ஊராட்சி அலுவலகம் அருகே சேரம்பாடி சுங்கம் காலனி அமைந்துள்ளது. அங்கு, 80க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. கிராம மக்களுக்கு இதே பகுதியில் குடிநீர் கிணறு அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள் இந்த திட்டம் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 'ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், குடிநீர் பெறுவதற்கு ஊராட்சிக்கு ஒவ்வொரு குடும்பத்தினரும் தலா, 2,000 ரூபாய் வைப்பு தொகை செலுத்த வேண்டும்,' என கூறி, குடிநீர் இணைப்பை துண்டித்தனர். மேலும், குடிநீர் வினியோகம் செய்ய முடியாத வகையில், மோட்டார் அறையில் இருந்த பியூஸ் கேரியரை குடிநீர் உதவியாளர் எடுத்துச் சென்று விட்டார். இதனால் கடந்த, 10 நாட்களாக தண்ணீர் இல்லாமல், இப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மேட்டுப்பாங்கான பகுதியில் அமைந்துள்ள இப்பகுதி மக்கள், கிணறுக்குச் சென்று தண்ணீர் எடுத்துச் செல்ல முடியாத நிலையில், சிரமப்படுகின்றனர். இந்நிலையில், பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, கிராமத்திற்கு வந்த, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஷைனி உட்பட அதிகாரிகளை முற்றுகையிட்டு நேற்று முன்தினம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, போலீஸ் நிலையத்தில் நடந்த பேச்சுவார்த்தையில், 'இரண்டு நாட்களுக்குள் குடிநீர் பிரச்னைக்கு முழுமையான தீர்வு காணப்படும்,' என, அதிகாரிகள் உத்தரவாதம் அளித்தனர். முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ