உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மனிதர்களுக்கு உதவும் பறவைகளை காக்க வேண்டும்

மனிதர்களுக்கு உதவும் பறவைகளை காக்க வேண்டும்

பந்தலுார், ; 'பறவைகளை அழிவின் பிடியில் இருந்து காக்க மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டது. பந்தலுார் அருகே தேவாலா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தேவாலா வனத்துறை; கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்; 'ஆல் தி சில்ட்ரன்' அமைப்பு இணைந்து, பறவைகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. பள்ளி தலைமை ஆசிரியர் லதா தலைமை வகித்தார். வனச்சரகர் சஞ்சீவி பேசுகையில், ''பறவைகள் தாவரங்கள் வளர உதவியாக உள்ளன. குறிப்பாக, மகரந்த சேர்க்கை மேற்கொள்ள பறவைகளின் பங்களிப்பு அவசியம். உலகில் சிறிய பறவை தேன்சிட்டு ஆகும். பெரிய பறவை நெருப்பு கோழி. எல்லா பறவைகளும் மனிதர்களுக்கு உதவும் வகையில் செயல்படுகின்றன. இருவாச்சி பறவை இனம் மரங்களில் கூடு கட்டிவாழும். குஞ்சு பொரிக்கும் காலத்தில் பெண் பறவையை கூண்டில் விட்டு இரை தேட செல்லும். அப்போது, ஆண் பறவை வரும் வரை பெண் பறவை காத்திருக்கும். சில காரணங்களால், ஆண் பறவை இறந்தால், பெண் பறவை உட்பட அதன் குடும்பம் அழிந்து போகும். இத்தகைய அரிய பறவைகளை காக்க வேண்டும்,'' என்றார்.கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ''பறவைகளால் மக்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. மனிதர்களால் பறவைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படகூடாது. ''குறிப்பாக நாம் பயன்படுத்தும் மாத்திரைகள், மருந்து பாட்டில்கள் உள்ளிட்டவை வெளியே போடகூடாது. அந்த மருந்துகளை பறவைகள் உட்கொண்டால் பாதிப்பு ஏற்படும். பறவைகளுக்கு தானியங்கள், தண்ணீர் ஆகியன வைப்பதால் அவற்றின் வாழ்வுக்கு பயன் ஏற்படும். மேலும், பழங்கள்தரும் மரங்களை அதிகம் வளர்க்க வேண்டும்,''என்றார்.'ஆல் தி சில்ட்ரன்' மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் பேசுகையில், ''பறவைகள் அனைத்து உயிரினங்களின் உணவு சங்கிலியை பாதுகாக்க கூடியவை. மேலும், விவசாய பயிர்களில் உள்ள பூச்சிகளை உணவாக எடுத்து கொண்டு விவசாயிகளுக்கு நண்பனாக உள்ளது. அவற்றை அழிவின் பிடியில் இருந்து காக்க மாணவர்கள் முன் வரவேண்டும். பிறருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என்றார். தொடர்ந்து, 'பறவைகளை பாதுகாப்போம்' என்கிற உறுதி மொழி எடுத்துக்கொள்ளப்பட்டது வீடுகளில் பறவைகள் வளர்ப்பதற்கான கூடுகள் வழங்கப்பட்டது. வனதுறையினர் சுரேஷ்குமார், பாலகிருஷ்ணன், சசிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிர்வாகிகள் அஜித்குமார்,அஸ்வினி, பள்ளி ஆசிரியர்கள் பிந்து, அன்பரசி, லத்திகாகுமாரி, கிருஷ்ணவேணி, ஜான்சி மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ